தூத்துக்குடி மாவட்டத்தின் எதிர்கால வளர்ச்சியை முன்னிறுத்தித் தயாரிக்கப்பட்ட 'முழுமைத் திட்டம்-2045' திட்டத்திற்குத் தமிழக அரசு தற்போது பச்சைக்கொடி காட்டியுள்ளது. இது தொடர்பான முறையான அறிவிப்பு அரசு இதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புதிய வளர்ச்சித் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டுள்ள தகவல் :

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 34 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி, சுமார் 463.62 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அடுத்த 20 ஆண்டுகளில் ஏற்படவுள்ள மக்கள் தொகை உயர்வு, தொழில் துறை விரிவாக்கம் மற்றும் உள்கட்டமைப்புத் தேவைகளைச் சீரமைப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். இத்திட்டம் மாவட்டத்தின் தொழில் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அலுவலக வேலை நாட்களில் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் அல்லது மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள உள்ளூர் திட்டக் குழும அலுவலகத்திற்குச் சென்று தகவல்களைப் பெறலாம். உலகெங்கிலும் உள்ள தூத்துக்குடி மக்கள் மற்றும் நேரில் வர இயலாதவர்கள் https://thoothukudilpa.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வரைபடங்கள் மற்றும் திட்ட ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தூத்துக்குடியின் அடுத்த இரண்டு தசாப்த கால வளர்ச்சியைத் தீர்மானிக்கப் போகும் இந்த மாஸ்டர் பிளான், நகரின் கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று கருதப்படுகிறது.

