தூத்துக்குடியில் தூய்மைப்பணியாளர்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அரசு சேவைகள் மற்றும் நலத்திட்டங்கள் பெறுவதற்கான வழிகாட்டுதல் முகாமினை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி மாநாட்டு மையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் (SWDS) கீழ், தூய்மைப் பணியாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் அரசுச் சேவைகள், நலத்திட்டங்களைப் பெறுவதற்கான சிறப்பு வழிகாட்டுதல் முகாம் இன்று (22.07.2026) நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சி. பிரியங்கா முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் இம்முகாமினைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:"நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களின் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தூய்மைப் பணியாளர்கள், குடும்ப உறுப்பினர்களுக்குச் சிறப்பு நலச்சேவைகள் வழங்கப்படுகின்றன.
தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நலவாரியத்தில் பதிவு செய்தல், சுகாதாரச் சேவைகள், வாழ்வியல் நலத்திட்டங்கள், சமூகப் பாதுகாப்பு, வாழ்வாதாரம், கல்வி, திறன் மேம்பாடு போன்ற சேவைகள் இம்முகாமில் வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசு மானியத்தில் அடையாள ஆவணங்களான ஆதார் பதிவு/திருத்தம், சாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை, வருமானச் சான்றிதழ், நிதி தொடர்பான சேவைகளைப் பெற ஒரு நாள் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. தூய்மைப் பணியாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் உரிய துறை அலுவலர்களை அணுகி இச் சேவைகளைப் பெற்றுப் பயன்பெற வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்