• vilasalnews@gmail.com

தூத்துக்குடி அருகே விபத்து : சாலையைக் கடக்க முயன்ற பைக் மீது கார் மோதி ஒருவர் உயிரிழப்பு!

  • Share on

தூத்துக்குடி புதூர்பாண்டியாபுரம் தேசிய நெடுஞ்சாலைப் பாலம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் படுகாயமடைந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.


ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மோகனசுந்தரம் என்பவர், மதுரையிலிருந்து திருச்செந்தூர் நோக்கித் தனது காரில் தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை வழியாகப் பயணித்துக் கொண்டிருந்தார். கார் புதூர்பாண்டியாபுரம் பாலத்தைக் கடந்து சென்றுகொண்டிருந்த வேளையில், விளாத்திகுளம் பேருந்து நிலையம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் சுதாகர் (40) தனது இருசக்கர வாகனத்தில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் சாலையைக் கடக்க முற்பட்டுள்ளார்.


அப்போது, சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் (மீடியன்) சட்டவிரோதமாக உடைக்கப்பட்டிருந்த இடைவெளியைப் பயன்படுத்தி அவர் சாலையைக் கடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. அந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக அவ்வழியே வந்த கார் பைக் மீது பலமாக மோதியது.


இக்கோர விபத்தில் பலத்த காயமடைந்த சுதாகருக்குத் தலையில் தீவிர இரத்தக் காயம், நெஞ்செலும்பு முறிவு மற்றும் இரு கால்களிலும் முட்டிக்குக் கீழ் எலும்பு முறிவுகள் ஏற்பட்டன. விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுத் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சுமார் 3:00 மணியளவில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


இவ்விபத்து தொடர்பாகப் புதியம்புத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, காரை ஓட்டி வந்த மோகனசுந்தரத்திடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share on

மகனை வெட்டிக்கொலை செய்த தந்தை கைது : எப்போதும் வென்றான் அருகே பரபரப்பு!

  • Share on