• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் பரபரப்பு : நாட்டு வெடிகுண்டு தயாரித்து 'ரீல்ஸ்' வெளியிட்ட 3 இளைஞர்கள் கைது!

  • Share on

பிறந்தநாளை முன்னிட்டு யூடியூப் வீடியோவை பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து வெடிக்க வைத்து, அதை சமூக வலைதளங்களில் பதிவிட்ட மூன்று இளைஞர்களை தூத்துக்குடி போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.


தூத்துக்குடி லெவஞ்சிபுரத்தைச் சேர்ந்த அலெக்ஸ் (22), அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (23) மற்றும் சுடலை காலனியைச் சேர்ந்த குரு (21) ஆகிய மூவரும் நண்பர்கள். இந்நிலையில், அலெக்ஸின் பிறந்தநாளையொட்டி புதுவிதமாக எதையாவது செய்யத் திட்டமிட்ட இவர்கள், யூடியூப் தளத்தில் உள்ள தகவல்களைப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்துள்ளனர்.


இதையடுத்து, தயாரித்த நாட்டு வெடிகுண்டை ஒரு திறந்தவெளிப் பகுதியில் வைத்து வெடிக்கச் செய்துள்ளனர். அதனைத் தங்கள் செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து, பிறந்தநாள் கொண்டாட்ட வாழ்த்து வீடியோவாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பதிவிட்டுள்ளனர்.


சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வேகமாகப் பரவியதை அடுத்து, தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் உத்தரவின் பேரில் தென்பாகம் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். உடனடியாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த அலெக்ஸ், பிரகாஷ் மற்றும் குரு ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.


கைதானவர்களிடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், "பகுதியில் உள்ளவர்களிடம் கெத்து காட்டுவதற்காகவே யூடியூப்பைப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து வெள்ளோட்டம் பார்த்தோம்" என்று அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.


இதனைத் தொடர்ந்து, அவர்களது வீடுகளில் மேலும் வெடிகுண்டுகள் அல்லது வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். 


இருப்பினும், இவர்கள் ஏதேனும் கோஷ்டி மோதலில் ஈடுபட திட்டமிட்டார்களா அல்லது வேறு ஏதேனும் நாசவேலைக்கு சதித்திட்டம் தீட்டினார்களா என்ற பல்வேறு கோணங்களில் தென்பாகம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Share on

ஆதனூர் அருள்மிகு ஸ்ரீ ஜெகவீர மொட்டையசாமி திருக்கோவில் திருப்பணி அடிக்கல் நாட்டு விழா!

தூத்துக்குடியில் பரபரப்பு : சிவந்தாகுளம் பகுதியில் கஞ்சா விற்ற 5 பேர் கைது - 5.5 கிலோ கஞ்சா, 2 பைக்குகள் பறிமுதல்!

  • Share on