தூத்துக்குடி தாளமுத்துநகர் கடற்கரைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை அரிவாளால் தாக்க முயன்ற நபரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் (SSI) முருகன் தலைமையிலான போலீஸ் குழுவினர், மொட்டைக் கோபுரம் கடற்கரைப் பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த நபர் ஒருவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சிறப்பு உதவி ஆய்வாளர் முருகனைத் தாக்க முயன்றுள்ளார்.
இதனை சற்றும் எதிர்பாராத நிலையிலும், உடனடியாகச் சுதாரித்துக் கொண்ட போலீசார், அந்த நபரைத் துரிதமாகச் செயல்பட்டு மடக்கிப் பிடித்தனர். மேலும், அவரிடமிருந்த அரிவாளையும் பறிமுதல் செய்தனர்.
பிடிபட்ட நபரிடம் போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், அவர் தூத்துக்குடி சேசுநகர் பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (43) என்பது தெரியவந்தது. மேலும், இவர் மீது கடந்த 2019-ஆம் ஆண்டு பதியப்பட்ட கொலை வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த தாளமுத்துநகர் காவல் துறையினர், ராதாகிருஷ்ணனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். போலீசாரையே தாக்க முயன்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.