தூத்துக்குடி மாவட்டம் வடக்கு காரசேரி கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தங்கை இருவரும் நீட் தேர்வில் சிறப்பான வெற்றி பெற்று, ஒரே நேரத்தில் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயிலத் தேர்வாகி அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் பாராட்டையும் பெற்றுள்ளனர்.
வடக்கு காரசேரி கிராமத்தைச் சேர்ந்த ராஜா – சீனிமாலா தம்பதியினர் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களது புதல்வர் சேதுபிரகாஷ் வல்லநாடு சாரா மெட்ரிகுலேஷன் பள்ளியிலும், புதல்வி செல்வி முகிலா பூவானி அரசு மேல்நிலைப் பள்ளியிலும் பள்ளிப் படிப்பை முடித்தனர்.
முறையான கடின உழைப்பால் நீட் (NEET) நுழைவுத் தேர்வை எதிர்கொண்ட இருவரும் அதில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி அடைந்தனர். இதன் மூலம் இருவருக்கும் கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் (MBBS) பயில்வதற்கான சேர்க்கை இடம் கிடைத்துள்ளது. எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவராகப் பயிலத் தேர்வாகியுள்ளது அக்கிராமத்திற்குப் பெருமை சேர்த்துள்ளது.
மருத்துவக் கல்விக்குத் தேர்வாகியுள்ள மாணவ, மாணவியின் எதிர்காலக் கல்வி சிறக்க தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று பொன்னாடை அணிவித்து வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மத்திய அரசு வழக்கறிஞரும், நோட்ரி பப்ளிக் மற்றும் பாஜக மாவட்ட துணைத் தலைவருமான செந்தில்குமார் பிரபு நேரில் கலந்துகொண்டு மாணவர்களைப் பாராட்டினார்.
உடன் வடக்கு காரசேரி கிளைத் தலைவர் மாடசாமி, நிர்வாகி மதியழகன், மாவட்ட நிர்வாகிகள் பேச்சி, முருகன், பிரவீன் மற்றும் சமூக ஊடகப் பிரிவு ஒன்றியத் தலைவர் ராபின் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு மாணவச் செல்வங்களுக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
