இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ‘செக்கிழுத்த செம்மல்’ வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 155-வது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
இதனை முன்னிட்டு, தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அவரது முழு திருவுருவச் சிலைக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ‘தேசியத் தலைவர் ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை திருமந்திர நகர் - தமிழ்நாடு’ அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், வ.உ.சி. திருவுருவச் சிலைக்கு வெள்ளி குடத்தில் புனித பால், நறுமண பன்னீர் மற்றும் சந்தனம் கொண்டு மங்கள அபிஷேகங்கள் செய்யப்பட்டன.

தொடர்ந்து, சிலைக்கு வண்ண மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு, சிவ முறைப்படியான வழிபாடுகளுடன் வீரவணக்க மரியாதையும் செலுத்தப்பட்டது. இதில் திரளான பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு தியாகச் செம்மலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக, இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் ராகவேந்திரா மற்றும் சிவலிங்கம், சுடலை மணி சஞ்சய் வேல் ஆகியோர் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளையும் ‘தேசியத் தலைவர் ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை திருமந்திர நகர் - தமிழ்நாடு’ அமைப்பின் மாவட்டத் தலைவர் பாலமுருகன் பிள்ளை தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.