தமிழகத்தின் மின் உற்பத்தித் திறனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முக்கிய முயற்சியாக, தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய அனல் மின் நிலையத்தின் முதல் அலகை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.
சுமார் ரூ. 13,077 கோடி மதிப்பீட்டில் தலா 660 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அலகுகளாக (2X660 MW) இந்த பிரம்மாண்ட மின் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் முக்கிய தொழில்நுட்ப அம்சங்கள் பின்வருமாறு:
இந்த மின் நிலையம் 'மிக உய்ய நிலை' தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. இதன் மூலம் குறைந்த நிலக்கரியைப் பயன்படுத்தி 5% கூடுதல் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். கப்பல்களில் இருந்து நிலக்கரியைக் கொண்டு வர கடலுக்கு அடியில் 9 கிலோமீட்டர் நீளத்திற்கு பிரத்யேக கன்வேயர் பெல்ட் அமைக்கப்பட்டுள்ளது. இது ஆசியாவிலேயே மிகப்பெரிய மற்றும் தனித்துவமான கட்டமைப்பாகக் கருதப்படுகிறது.

நிலத்தடி நீரைப் பயன்படுத்தாமல், கடல் நீரை குடிநீராக்கும் தொழில்நுட்பம் மூலம் நாள் ஒன்றுக்கு 13 மில்லியன் லிட்டர் தண்ணீர் உற்பத்தி செய்யப்பட்டு, ஆலைத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த புதிய அனல் மின் நிலையம் செயல்பாட்டிற்கு வந்ததன் மூலம், வெளிச் சந்தையில் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கும் சுமை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தென் தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் உருவாகவும், வேலைவாய்ப்புகள் பெருகவும் இது ஒரு முக்கிய காரணியாக அமையும்.
சென்னையில் நடைபெற்ற இந்தத் தொடக்க விழாவில் தலைமைச் செயலாளர் முருகானந்தம், மின் வாரியத் தலைவர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் மற்றும் எரிசக்தித் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து, உடன்குடியில் அமைந்துள்ள மின் நிலைய வளாகத்தை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், எம்.எல்.ஏ சண்முகையா மற்றும் மின் உற்பத்தி கழக மேலாண்மை இயக்குனர் கோவிந்த ராவ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

