• vilasalnews@gmail.com

வேடநத்தம் உயிரிழந்த மாணவி வீட்டுக்கு வந்த கனிமொழி... சஸ்பென்ஸ் பதிலால் பரபரக்கும் அரசியல் களம்!

  • Share on

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. திமுக, அதிமுக எனப் பிரதான கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், திமுக துணைப் பொதுச்செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.


கடந்த தேர்தல்களைக் காட்டிலும் இந்த முறை பல்வேறு கட்சிகளை உள்ளடக்கிய பிரம்மாண்ட கூட்டணியை திமுக ஒருங்கிணைத்துள்ளது. கட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக முக்கிய ஆளுமையாகத் திகழும் கனிமொழி, இந்த முறை மாநில அரசியலில் நேரடியாகக் களம் காண வேண்டும் என்பது உடன்பிறப்புகளின் நீண்ட நாள் விருப்பமாக உள்ளது.


குறிப்பாக, அவர் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் தலைமைக்கு விருப்ப மனுக்களை அள்ளிக் குவித்து வருகின்றனர். சமீபத்தில் காங்கிரஸ் கட்சியுடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் அவர் டெல்லியில் நேரடியாகப் பங்கேற்றது, அவர் மாநில அரசியலுக்குத் திரும்பப் போகிறார் என்பதற்கான சமிக்ஞையாகவே பார்க்கப்படுகிறது.


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே வேடநத்தம் பகுதியில் பிளஸ் 2 மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் குற்றவாளிகளைக் கண்டறிய தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.


இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக கனிமொழி எம்.பி அங்கு சென்றிருந்தார். துயரத்தில் இருந்த குடும்பத்தினருக்குத் தைரியம் கூறிவிட்டு அவர் வெளியே வந்தபோது, அங்கிருந்த செய்தியாளர்கள் அவரிடம் அரசியல் ரீதியான கேள்விகளை எழுப்பினர்.


வரும் சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் போட்டியிடப் போவதாகத் தகவல்கள் வருகிறதே, உங்கள் முடிவு என்ன? எனச் செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.


அதற்குப் பதிலளித்த கனிமொழி எம்.பி, எதற்கும் பிடிகொடுக்காமல், தன் பாணியில் புன்னகைத்தபடி, "தொண்டை கட்டிக் கொண்டுள்ளது, பிறகு பேசுகிறேன்" எனக் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.


அவர் நேரடியாக 'இல்லை' என்று மறுக்காமல், சிரித்தபடியே மழுப்பலாக சஸ்பென்ஸ் பதிலளித்தது, அவர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதையே காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இது குறித்த இறுதி முடிவை திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எடுப்பார் என்றும், இன்னும் சில தினங்களில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

  • Share on

உடன்குடி அனல் மின் நிலையம் : தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

கோவில்பட்டிக்கு குறிவைத்த வைகோ... இதான் அதற்கான பின்னணி!

  • Share on