திமுகவிலிருந்து பிரிந்து 1994-ல் மதிமுகவைத் தொடங்கிய வைகோ, தமிழக அரசியலில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த 30 ஆண்டுகால அவரது அரசியல் பயணம் பெரும் ஏற்ற இறக்கங்களையும், சட்டசபை அங்கீகாரத்திற்கான நீண்ட போராட்டத்தையுமே சாட்சியாகக் கொண்டுள்ளது.
கட்சி தொடங்கிய இரண்டு ஆண்டுகளில் (1996) சந்தித்த முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே மதிமுக கடும் பின்னடைவைச் சந்தித்தது. 177 இடங்களில் போட்டியிட்டும், வெறும் 4 இடங்களில் மட்டுமே டெபாசிட் கிடைத்தது. வைகோவின் உணர்ச்சிமிக்க பேச்சைக் கேட்கக் கூடிய மக்கள், ஏன் வாக்குளாக மாற்றவில்லை என்பது இன்றும் அரசியல் விமர்சகர்களால் விவாதிக்கப்படும் ஒரு புதிராகவே உள்ளது. அடுத்து வந்த 2001 தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்டு அக்கட்சிக்கு சொல்லிக்கொள்ளும்படி வெற்றி கிடைக்கவில்லை.
2006-ம் ஆண்டு அதிமுக கூட்டணியில் இணைந்த மதிமுக, 6 இடங்களில் வெற்றி பெற்று முதன்முறையாக சட்டசபைக்குள் நுழைந்தது. ஆனால், அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. 2011 தேர்தலில் இடப்பகிர்வு சிக்கலால் தேர்தலையே புறக்கணிக்கும் நிலைக்கு வைகோ தள்ளப்பட்டார்.
2016-ல் 'மக்கள் நலக் கூட்டணி' மூலம் விஜயகாந்தை முன்னிறுத்தி வைகோ களம் கண்டார். ஆனால், தமிழக மக்கள் அந்தப் பரிசோதனையை முற்றிலுமாக நிராகரித்தனர். இது அக்கட்சியின் தொண்டர்களிடையே பெரும் சோர்வை ஏற்படுத்தியதுடன், பலர் கட்சியை விட்டு வெளியேறவும் காரணமானது.
சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு, 2021 தேர்தலில் திமுகவுடன் கைகோர்த்தார் வைகோ. எனினும், உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்ற திமுகவின் கறாரான நிபந்தனையால், மதிமுகவிலிருந்து வென்றவர்கள் சட்டப்படி திமுக எம்.எல்.ஏ-க்களாகவே கருதப்பட்டனர். இதனால் சட்டசபையில் மதிமுக என்ற பெயரில் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள் இல்லாத நிலையே நீடித்தது.
தற்போது வரவிருக்கும் 17-வது சட்டமன்றத் தேர்தலிலும் திமுக கூட்டணியே தொடர்கிறது. கடந்த முறையை விட முதல்வர் ஸ்டாலின் சற்றே பெருந்தன்மை காட்டியிருப்பதாகத் தெரிகிறது. கடந்த முறை வென்ற 4 இடங்களைத் தருவதாகக் கூறியுள்ள திமுக தலைமை, அதில் ஒரு தொகுதியில் மட்டும் மதிமுக தனது தனிச் சின்னத்தில் போட்டியிட அனுமதித்துள்ளது.
இந்த ஒரு வாய்ப்பையாவது பயன்படுத்தி, பல ஆண்டுகளுக்குப் பிறகு சட்டசபையில் ஒரு அதிகாரப்பூர்வ மதிமுக உறுப்பினரை வைகோ அமர வைப்பாரா என்ற எதிர்பார்ப்பை விட, வைகோவே அதிகாரப்பூர்வ மதிமுக உறுப்பினராக சட்டசபையில் நுழைய வேண்டும் என மதிமுகவினர் விரும்புகிறாராம்.
தமிழக அரசியலில் ஒரு நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டிருப்பவர் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தனது கணீர் குரலால் தமிழகத்தின் உரிமைகளுக்காகப் போராடிய அவர், தமிழக சட்டமன்றத்திற்குள் ஒருமுறை கூட நுழைந்ததில்லை என்பது ஒரு வரலாற்றுப் பதிவாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அவர் நேரடியாகக் களம் இறங்கப்போவதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றிருந்த ம.தி.மு.க, 6 தொகுதிகளில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றிக்கொடி நாட்டியது. ஆனால், இந்த முறை அதே கூட்டணியில் ம.தி.மு.க-வுக்கு 4 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், 3 தொகுதிகளில் தி.மு.க-வின் உதயசூரியன் சின்னத்திலும்,1 தொகுதியில் ம.தி.மு.க-வின் தனிச் சின்னத்திலும் போட்டியிட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த முறையை விட இடங்கள் குறைந்திருந்தாலும், ம.தி.மு.க வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை தி.மு.க தரப்பே கவனித்துக் கொள்ளும் என்ற உடன்பாட்டின் அடிப்படையிலேயே இந்த ஒதுக்கீடு ஏற்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
3 முறை மாநிலங்களவை உறுப்பினராகவும், 2 முறை மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றிய வைகோவுக்கு, மீண்டும் ஒருமுறை மாநிலங்களவை செல்லும் விருப்பம் இருந்ததாகத் தெரிகிறது. இருப்பினும், அந்த வாய்ப்பு கூட்டணி கணக்குகளால் தே.மு.தி.க வசம் சென்றதால், வைகோ தற்போது தனது கவனத்தைச் சட்டமன்றத் தேர்தலின் பக்கம் திருப்பியுள்ளார்.
கடைசியாக 1996-ம் ஆண்டு விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவிய வைகோ, அதன் பிறகு சுமார் 30 ஆண்டுகளாக எந்தவொரு சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிடவில்லை.
தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, வைகோ கோவில்பட்டி தொகுதியில் களம் இறங்க முடிவு செய்துள்ளதாகக் கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, ம.தி.மு.க-வுக்கு ஒதுக்கப்பட்ட அந்த ஒரு 'தனிச் சின்னம்' தொகுதியில் அவர் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
அரை நூற்றாண்டு கால அரசியல் வாழ்க்கையில், வைகோவின் குரல் இதுவரை தமிழகச் சட்டமன்றத்தில் எதிரொலித்தது இல்லை. இந்த முறை அவர் வெற்றி பெற்றால், அவரது குரல் சட்டசபையில் ஓங்கி ஒலிக்கும் என்பதில் ஐயமில்லை.

