• vilasalnews@gmail.com

"ரூ.100 கோடி பேரம்; லாரி ஏற்றி கொல்ல மிரட்டல்" - தவெக எம்.எல்.ஏ சரவணன் வெளியிட்ட ஆடியோவால் தமிழக அரசியலில் புதிய பரபரப்பு!

  • Share on

தமிழக அரசியலில் தவெக எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க முயற்சி நடப்பதாக அடுத்தடுத்து புகார்கள் எழுந்து வரும் நிலையில், ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக எம்.எல்.ஏ சரவணன் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக ஆடியோ ஆதாரத்துடன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்ற தமிழக வெற்றிக் கழகம் (தவெக), தனது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது. எனினும், தவெக பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக அதிமுக மற்றும் திமுக எம்.எல்.ஏக்களை குதிரை பேரம் செய்து, அவர்களை ராஜினாமா செய்ய வைத்து தங்கள் பக்கம் இழுப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

இதற்கிடையே, தவெக ஆட்சியை கவிழ்ப்பதற்காக அதன் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க எதிர்க்கட்சிகள் தரப்பில் பேரம் பேசப்படுவதாக தவெக தரப்பிலும் பதில் புகார்கள் கிளம்பியுள்ளன. ஏற்கனவே, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசியதாக சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கில் யூடியூபர் திருநாவுக்கரசு, மேடவாக்கம் தியாகராஜன், திருச்சி நரேஷ், கரூர் ரமேஷ் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் ஆகியோரின் தூண்டுதலின் பேரிலேயே இந்த பேரம் நடந்ததாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படும் நிலையில், இருவருக்கும் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில், தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக எம்.எல்.ஏ சரவணன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது திமுகவினர் தன்னிடம் பேரம் பேசியதாகக் கூறி ஆடியோ ஆதாரம் ஒன்றை வெளியிட்டு அவர் பேசியதாவது:

"அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் 4 பேரும், நெல்லையைச் சேர்ந்த தியேட்டர் அதிபர் ஒருவரும் தன்னிடம் நேரடியாகப் பேரம் பேசினர். திமுகவிற்கு வந்துவிடும்படியும், இல்லையென்றால் அழித்துவிடுவோம் என்றும் மிரட்டுகிறார்கள்.

ரூ.30 கோடி, ரூ.50 கோடி அல்லது ரூ.100 கோடி தருகிறோம் என்று ஆசை காட்டுகிறார்கள். தென்மாவட்ட அரசியலில், தமிழ்நாட்டின் 100 பணக்காரர்களில் 60 சதவீதம் பேர் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான். நீங்கள் ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்திருப்பதால் பணத்திற்குப் பணிய வேண்டும் என்ற நோக்கில் பேசுகிறார்கள்."

தொடர்ந்து பேசிய எம்.எல்.ஏ சரவணன், தன்னிடம் பேரம் பேசப்பட்டதற்கான அனைத்து ஆதாரங்களும் இருப்பதாகத் தெரிவித்தார்.

"எதிர்க்கட்சியினர் வாய்மொழியாகப் பொய் குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறார்கள். ஆனால், என்னிடம் தெளிவான ஆதாரங்கள் உள்ளன. எம்.எல்.ஏ குடியிருப்புக்கே வந்து என்னை மிரட்டுகிறார்கள். வெளியில் வண்டியில் சென்றால் லாரியை வைத்து அடித்துக் கொன்றுவிடுவோம் என்று அடுக்கடுக்கான அச்சுறுத்தல்களை விடுக்கிறார்கள்" என்று சரவணன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சரவணன் வெளியிட்டுள்ள இந்த அதிரடி பேட்டியும், ஆடியோ ஆதாரமும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் உலுக்கலையும், கூடுதல் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

  • Share on

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் மின்தடை... எங்கே? எப்போது?

திருச்செந்தூர் கோயில் சேவைக் கட்டண உயர்வு: கருத்து தெரிவிக்க ஜூலை 21 வரை அவகாசம் நீட்டிப்பு!

  • Share on