தூத்துக்குடியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், பாரதிய ஜனதா கட்சியினரை அச்சுறுத்தும் வகையில் பேசியதாக மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி, தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் பகுதியில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய மேயர் ஜெகன் பெரியசாமியின் பேச்சு, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாவட்டத் தலைவர் ஆர். சித்ராங்கதன், ஜனநாயக மரபுகளை மீறி, அதிகாரப் பதவியில் இருப்பவரே பொதுமேடையில் எதிர்க்கட்சியினரை மிரட்டுவது கண்டிக்கத்தக்கது. இத்தகைய பேச்சுக்கள் சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேயரின் பேச்சுக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக் கோரி, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் பாஜக வழக்கறிஞர் பிரிவினர் புகார் மனு அளித்துள்ளனர். பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசிய மேயர் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அதிகார பலத்தைப் பயன்படுத்தி அரசியல் எதிரிகளை அச்சுறுத்தும் போக்கை ஒருபோதும் ஏற்க முடியாது. சட்டத்தை மீறிப் பேசியவர் மீது காவல்துறை பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.



