தூத்துக்குடி அருகே பட்டப்பகலில் பெண்ணிடம் நகை பறித்த இருவரை, மின்னல் வேகத்தில் செயல்பட்டு 3 மணி நேரத்திற்குள் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள நடுக்கூட்டுடன்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மந்திரமுத்து (57). இவர் சொக்கலிங்கபுரம் பகுதியில் கட்டி வரும் தனது புதிய வீட்டின் பணிகளைப் பார்வையிட, நேற்று மதியம் தனது அண்ணன் கருப்பசாமியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றார்.
உமரிக்கோட்டை சாலை பாலம் அருகே அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் பைக்கில் வந்த இரு மர்ம நபர்கள், மந்திரமுத்துவின் வாகனத்தின் மீது மோதி அவர்களைக் கீழே தள்ளினர். நிலைதடுமாறி விழுந்த மந்திரமுத்துவின் கழுத்தில் இருந்த 7 பவுன் தாலிச் சங்கிலி மற்றும் 6 பவுன் செயின் என மொத்தம் 13 பவுன் தங்க நகைகளை அந்த நபர்கள் பறித்துக்கொண்டு தப்பினர்.
பாதிக்கப்பட்ட மந்திரமுத்து அளித்த புகாரைத் தொடர்ந்து, தட்டப்பாறை இன்ஸ்பெக்டர் ஸ்டெல்லா பாய் வழக்குப்பதிவு செய்தார். மாவட்ட எஸ்பி மதன் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை தொடங்கியது. சப்-இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் மற்றும் காவலர் பொன்பாண்டி தலைமையிலான குழுவினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
விசாரணையில், மேலத்தட்டாப்பாறையைச் சேர்ந்த தளவாய் ராஜ் (33) மற்றும் முருகன் (33) ஆகிய இருவர் தான் இந்தத் திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அடுத்த 3 மணி நேரத்திற்குள் இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து திருடப்பட்ட 13 பவுன் நகைகளையும் முழுமையாக மீட்டனர்.
மிகக் குறுகிய காலத்தில் நகை பறிப்பில் ஈடுபட்டவ்ர்களை கண்டறிந்து நகைகளை மீட்ட சப்-இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் மற்றும் காவலர் பொன்பாண்டி ஆகியோரை பொது மக்கள் பாராட்டினார்.




