தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளை, சமூக வலைதளங்களில் வீடியோ வைரலான பயத்தில் திருடன் மீண்டும் அதே இடத்திலேயே விட்டுச் சென்ற வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.
சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் கிளைட்டன் (37). இவர் கடந்த வியாழக்கிழமை அன்று அப்பகுதியில் நடைபெற்ற வாரச்சந்தைக்குப் பொருட்கள் வாங்க தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். சந்தை வாசலில் பைக்கை நிறுத்திவிட்டுச் சென்றவர், திரும்பி வந்து பார்த்தபோது வாகனம் மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து அப்பகுதி வியாபாரிகள் சங்கத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, மர்ம நபர் ஒருவர் பைக்கைத் திருடிச் செல்லும் காட்சிகள் தெளிவாகப் பதிவாகியிருந்தது. உடனடியாக ஆசிரியர் கிளைட்டன் இது குறித்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதற்கிடையில், அந்தத் திருட்டுச் சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவியது. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், வீடியோ வைரலானதால் தான் பிடிபட்டுவிடுவோம் என அஞ்சிய அந்த நபர், திருடிய பைக்கை மீண்டும் திருடிய இடத்திலேயே கொண்டு வந்து விட்டுச் சென்றுள்ளார். மீட்கப்பட்ட பைக்கை போலீசார் முறைப்படி உரிமையாளரான ஆசிரியர் கிளைட்டனிடம் ஒப்படைத்தனர். பைக் திரும்பக் கிடைத்தாலும், திருட்டில் ஈடுபட்ட அந்த மர்ம நபர் யார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




