தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தைப் பயன்படுத்தி, வாட்ஸ்அப்பில் போலி கணக்குகளை உருவாக்கி பண மோசடியில் ஈடுபட முயன்ற உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரை சைபர் க்ரைம் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தை தனது வாட்ஸ்அப் முகப்புப் படமாக (DP) வைத்து, பொதுமக்களிடம் பண மோசடி செய்யும் நோக்கில் சில போலி கணக்குகள் இயங்கி வருவதாகப் புகார் எழுந்தது. இது குறித்து மாவட்ட ஆட்சியரின் தனிப்பட்ட உதவியாளர், தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் பேரில், கூடுதல் கண்காணிப்பாளர் தீபு மேற்பார்வையில், ஆய்வாளர் சாந்தி தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.
தொழில்நுட்ப ரீதியாக நடத்தப்பட்ட விசாரணையில், இந்த மோசடிச் செயலில் ஈடுபட்டது உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அனுஜ் குமார் (21) என்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, தனிப்படை போலீசார் கடந்த பிப்ரவரி 9-ம் தேதி உத்தரப்பிரதேசத்திற்கு விரைந்து சென்று அனுஜ் குமாரை மடக்கிப் பிடித்தனர். தமிழகம் அழைத்து வரப்பட்ட அவர், நேற்று (பிப்ரவரி 12) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
துரிதமாகச் செயல்பட்டு குற்றவாளியைக் கண்டறிந்த சைபர் குற்றப்பிரிவு போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டியுள்ளார்.
மேலும், அரசு உயர் அதிகாரிகளின் புகைப்படங்களை வைத்து யாராவது பணம் கேட்டால், பொதுமக்கள் ஏமாற வேண்டாம் எனவும், உடனடியாகப் புகார் அளிக்க வேண்டும் எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது. இந்தச் சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




