தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை, வரும் பிப்ரவரி 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக இருக்கும் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை தற்போது தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி மற்றும் ஒரு மகன் ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவில்லை. அமைச்சரின் மற்ற இரு மகன்களான அனந்த பத்மநாபன் மற்றும் அனந்த மகேஸ்வரன் ஆகியோர் மட்டும் நேரில் ஆஜராகினர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த மாவட்ட நீதிபதி வசந்தி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை பிப்ரவரி 16-ஆம் தேதிக்கு தள்ளிவைப்பதாக அறிவித்தார். அன்றைய தினம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




