தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போதிய மழையின்றி பயிர்கள் கருகும் நிலையில் உள்ளதால், மணிமுத்தாறு அணையில் இருந்து உடனடியாகத் தண்ணீர் திறக்கக் கோரி விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
வசுவப்பனேரி மற்றும் மீரான்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், கருகிய நிலையில் உள்ள தங்களது பயிர்களைக் கையில் ஏந்தியபடி ஆட்சியர் அலுவலகத்திற்குத் திரண்டு வந்தனர். கடந்த ஆண்டு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால், மாவட்டத்தின் பிரதான நீர் ஆதாரமான குளங்கள் நிரம்பவில்லை.
குறிப்பாக வல்லகுளம், அரசர்குளம், பெருமாள்குளம், மீரான்குளம், புதுக்குளம், வெட்டிகுளம், தேர்க்கன்குளம், கட்டாரிமங்கலம் மற்றும் அறிவான்மொழி ஆகிய பகுதிகளில் உள்ள குளங்கள் தற்போது முற்றிலும் வறண்டு காணப்படுகின்றன.
பாசனத்திற்குத் தண்ணீர் இல்லாததால், வாழ்வாதாரமாக நம்பியுள்ள வேளாண் பயிர்கள் அனைத்தும் வாடி வருகின்றன. தற்போதைய இக்கட்டான சூழல் நீடித்தால், பயிர்கள் முழுமையாக அழிந்து விவசாயிகளுக்குப் ஈடுசெய்ய முடியாத நிதி இழப்பும், பெரும் மன உளைச்சலும் ஏற்படும் என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே, கருகும் நிலையில் உள்ள பயிர்களைக் காப்பாற்ற, மணிமுத்தாறு அணையின் 3-ஆவது ரீச் கால்வாய் வழியாக உடனடியாகத் தண்ணீரைத் திறந்து விட மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.




