• vilasalnews@gmail.com

தண்ணீர் எங்கே? பா.ஜ.க. கொடுத்த ஒரு வாரம் கெடு... தூத்துக்குடியில் தி.மு.க.வுக்கு எதிராகப் போராட்டம்!

  • Share on

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆதிராதபுரம் பஞ்சாயத்தில் உள்ள நவலெட்சுமிபுரம் மற்றும் திருக்கோளூர் பஞ்சாயத்திற்குட்பட்ட கீழபால்குளம் பகுதிகளில், குடிநீர், மின்விளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட செய்து தர முடியாத தி.மு.க., ஆட்சியின் அலட்சியத்தை கண்டித்து, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் சித்ராங்கதன் தலைமையில், பாரதிய ஜனதா கட்சியினர் அப்பகுதி மக்களுடன் இணைந்து ஏரல் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.


இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தலைவர் சித்ராங்கதன்:-


“தாமிரபரணி நதிக்கரையில் வாழும் நவலெட்சுமிபுரம், தெற்கு பால்குளம் மக்கள், கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். ஆட்சியில் இருப்பவர்கள் வளர்ச்சி, சமூக நீதி என பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அடிப்படை தேவையான குடிநீரையே வழங்க முடியாத நிலை தான் இங்கு உள்ளது. இது ஆட்சியின் முழுமையான தோல்வியை வெளிப்படுத்துகிறது” என்றார்.


மேலும் அவர் கூறுகையில், “இங்குள்ள எம்.எல்.ஏ., எம்.பி., ஆகியோர் சென்னையில் வசித்து அரசியல் வசதிகளை அனுபவித்து வருகிறார்கள். மக்களின் பிரச்சனைகளை நேரில் வந்து பார்ப்பதற்கோ, தீர்வு காண்பதற்கோ அவர்கள் தயாராக இல்லை. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் வந்தால், வெள்ளம் வடிந்த பிறகே இப்பகுதிக்கு வருகிறார்கள். விவசாயிகள் பயிரிட்டு உழைத்த பயிர்கள் அழிந்து மாடுகளுக்கான தீவனமாக மாறிய பிறகுதான் வந்து ‘ஆய்வு’ நடத்துவது தான் இவர்களின் அரசியல் நாடகம்” என்று கடுமையாக சாடினார்.


ஒரு வார காலத்திற்குள் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் செய்து தரப்படாவிட்டால், அப்பகுதி மக்களுடன் இணைந்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆழ்வார் திருநகரி பஜாரில் மிகப்பெரிய சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் எனவும், மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வரை பா.ஜ., தொடர்ந்து களப்போராட்டங்களை முன்னெடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார். 


இந்த நிகழ்வில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் கனல் ஆறுமுகம், செல்வராஜ், மாவட்ட செயலாளர்கள் சபரி, பானுமதி மோகன், மாவட்ட துணைத் தலைவர் நவமணிகண்டன், வழக்கறிஞர் பிரிவு தலைவர் சீனிவாசன், ஓபிசி அணி தலைவர் வெண்ணிமாலை, ஒன்றிய தலைவர் மணிகண்டன், ஒன்றிய பொதுச் செயலாளர் அந்தோணி, சரவணன், மாதவன், ஜெய்சிங், வேல்குமார், மாசானமுத்து, சத்தியநாராயணன், கிளை தலைவர் சுரேஷ்மணி உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

  • Share on

கருகும் பயிர்கள்... காப்பாற்றக் கோரி தூத்துக்குடியில் விவசாயிகள் கதறல்!

நிஜ வாழ்வு ஹீரோ இளம்பகவத்... தூத்துக்குடி கலெக்டர் ஆபீஸில் நடந்தது என்ன?

  • Share on