மதுவினால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கக் கோரி, உடலில் மது பாட்டில்களைக் கட்டிக்கொண்டு சமூக ஆர்வலர் ஒருவர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாலகிருஷ்ணன், மது ஒழிப்பு மற்றும் மதுவினால் ஏற்படும் தீமைகளுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
தமிழக அரசு மது விற்பனையில் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பாலகிருஷ்ணன் இன்று ஒரு வினோதப் போராட்டத்தைக் கையில் எடுத்தார். தனது உடலில் மூன்று மது பாட்டில்களைக் கயிறால் கட்டிக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தார்.
அளவில்லாமல் மது வழங்கப்படுவதால் குடிமகன்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டு, குடும்பங்கள் சிதைகின்றன. அதிக உயிரிழப்புகளால் இளம் பெண்கள் விதவையாகும் நிலை தொடர்கிறது. எனவே, மருத்துவர்களின் பரிந்துரைச் சான்றிதழ் அடிப்படையில் மட்டுமே குறைந்த அளவு மதுவை வழங்க அரசு சட்டம் இயற்ற வேண்டும்.
மது பாட்டில்களுடன் அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற பாலகிருஷ்ணனை போலீஸார் தடுத்தனர். உடலில் இருந்த பாட்டில்களை அகற்றச் சொன்னபோது, "என்னால் முடியாது, நீங்களே அகற்றிக் கொள்ளுங்கள்" என்று அவர் கூறியதால் இருதரப்புக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில் போலீஸார் அந்தப் பாட்டில்களை அவிழ்த்து அகற்றினர்.
ஆட்சியர் அலுவலகத்திற்கு இவ்வாறான பொருட்களுடன் வரக்கூடாது என எச்சரிக்கை செய்த போலீஸார், அவரை விசாரணைக்குப் பின் கோரிக்கை மனுவை அளிக்க அனுமதித்தனர். இந்த நூதனப் போராட்டத்தால் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.



