தமிழகத்தின் ஆளும்கட்சியான திமுக, தமிழ் காக்க, இனம் காக்க, மண் காக்க, கலாச்சாரத்தைக் காக்க "ஓரணியில் தமிழ்நாடு" என்கிற பெயரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை ஜூலை 3 ஆம் தேதி தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடங்கவுள்ளது.
இதனை ஜூலை 1ஆம் தேதியான இன்று சென்னையில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டத்திலும் இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி வடக்கு மா.செவும், அமைச்சருமான கீதா ஜீவன், தெற்கு மா.செவும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூறுகையில்:-
மொழியை, இனத்தை, மண்ணை காப்பாற்ற வேண்டிய கடமை திராவிட முன்னேற்ற கழகத்துக்கு இருக்கிறது. இதை அரசியலாக பார்க்காமல் அனைத்து தரப்பினரும் இணைந்து தமிழ்நாட்டை காக்க கைகோர்க்க வேண்டும். அதற்காகவே மக்களை சந்தித்து ஓரணியில் தமிழ்நாடு என்பதை மத்திய அரசுக்கு காட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்த தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிக்கிறது. தமிழ்நாட்டுக்காக மத்திய அரசு எந்த சிறப்பு திட்டத்தையும் தர வில்லை. பள்ளி கல்விக்கான நிதியை வழங்க மத்திய அரசு மறுக்கிறது. மத்திய அரசின் திட்டங்களுக்கு கூட தமிழ்நாடு தான் நிதி தருகிறது.
தமிழ்நாட்டின் பெருமை வெளியே வந்துவிடக்கூடாது என்பதற்காக கீழடி ஆய்வறிக்கையை கூட வெளியிட மத்திய அரசு மறுக்கிறது. மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கவும் மத்திய அரசு திட்டமிடுகிறது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு திமுக தயாராகி விட்டது. அமித்ஷா தமிழ்நாட்டுக்கு வரும்போது எல்லாம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார். நீட் காரணமாக தமிழ் மாணவர்களின் மருத்துவ கனவு கலைந்து போகிறது. தேசிய கல்வி கொள்கை என்பது இந்தி திணிப்பாகத்தான் இருக்கிறது.
அனைவரது வீடுகளுக்கும் சென்று அரசின் திட்டங்களை எடுத்துக்கூறி மக்களை சந்திக்க உள்ளோம். 2026 தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்.
திருப்புவனம் சம்பவத்தில் உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.




