கிருஷ்ணகிரி அருகே இரண்டரை வயது பெண் குழந்தை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இக்கொடூரச் செயலில் ஈடுபட்டதாக ஆளுங்கட்சி நிர்வாகி ஒருவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், திருவண்ணாமலையைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அந்தப் பெண் தனது கணவரைப் பிரிந்து, குழந்தையுடன் கிருஷ்ணகிரியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.
கடந்த டிசம்பர் மாதம் 11-ஆம் தேதி, குழந்தைக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாகக் கூறி அதன் தாய் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், அது ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர்.
தகவலறிந்த குழந்தையின் தந்தை, தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி அஞ்செட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனடிப்படையில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.குழந்தையின் உடற்கூறு ஆய்வு முடிவுகள் வெளியானபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. குழந்தையின் உடலில் கடுமையான உள்காயங்கள் இருந்ததும், அது இயற்கையான மரணம் அல்ல என்பதும் அதில் உறுதியானது.
கணவரைப் பிரிந்திருந்த பெண்ணுக்கும், கோம்மைகாடு கிராமத்தைச் சேர்ந்த பெரியநாயகம் (40) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பெரியநாயகம் திமுக இளைஞரணி கிளை நிர்வாகியாகப் பொறுப்பு வகித்து வந்தவர். தாய் வீட்டில் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி, பெரியநாயகம் அந்தப் பிஞ்சு குழந்தைக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
பெரியநாயகம் மீது கொலை மற்றும் போக்சோ உள்ளிட்ட கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு, கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் தர்மபுரி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.



