தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சென்னையில் விரிவான விளக்கங்களை அளித்தார். இந்தத் தேர்தல் ஒட்டுமொத்த நாட்டிற்கே ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னையில் அரசியல் கட்சிகள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலைச் சிறப்பாக நடத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்துப் பட்டியலிட்டார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர்களுடன், அவர்களின் வண்ணப் புகைப்படங்களும் இடம்பெறும். வாக்குச்சாவடிகளுக்குள் செல்போன் கொண்டு செல்லத் தடையுள்ள நிலையில், வாக்காளர்கள் தங்கள் அலைபேசிகளைப் பாதுகாப்பாக ஒப்படைக்கச் சிறப்புப் பாதுகாப்பகங்கள் அமைக்கப்படும்.
தேர்தல் நாளன்று ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறையும் வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். வழக்கமாகத் தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படும். ஆனால், இந்தத் தேர்தலில் கடைசி இரண்டு சுற்று வாக்குகள் எண்ணப்படும் போது தபால் வாக்குகள் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய அவர், சமூக வலைதளங்களில் பகிரப்படும் தேர்தல் தொடர்பான பதிவுகள் தீவிரமாகக் கண்காணிக்கப்படும் என்றும், அதிகாரிகள் அச்சமின்றித் தங்களின் பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்புப் பணிகள் குறித்து சர்வதேச அளவில் 72 நாடுகள் பங்கேற்ற கூட்டத்தில் பெருமையுடன் குறிப்பிட்டதாகக் கூறிய ஞானேஷ் குமார், உள்ளூர் திருவிழாக்கள் மற்றும் மக்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டே தேர்தல் தேதி முடிவு செய்யப்படும் என்று உறுதியளித்துள்ளார்.



