• vilasalnews@gmail.com

அய்யா வைகுண்டர் 194 வது அவதார திருநாள்: தென் தமிழகத்தில் கோலாகலம்!

  • Share on

சமூக சமத்துவத்திற்காகப் பாடுபட்ட அய்யா வைகுண்டரின் 194-வது அவதார தின விழா, இன்று தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 20-ஆம் தேதி இந்த விழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான விழாவை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்பு தலைமைப் பதி நோக்கி மாபெரும் அவதார தின ஊர்வலம் இன்று காலை தொடங்கியது.


நேற்றைய தினமே திருச்செந்தூரில் உள்ள அவதார பதி மற்றும் வைகுண்டர் சிறை வைக்கப்பட்டிருந்த பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வாகனங்கள் மூலம் நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் திரண்டனர். இன்று காலை அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அய்யா வைகுண்டர் எழுந்தருள, முத்து குடைகள் மற்றும் மேளதாளங்கள் முழங்க ஊர்வலம் புறப்பட்டது. தலைப்பாகை அணிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் "அய்யா சிவ சிவ அரஹரா அரஹரா" என்ற முழக்கத்துடன் கோட்டார், ஈத்தாங்காடு மற்றும் தாமரைக்குளம் வழியாக சாமிதோப்பை நோக்கிப் பயணித்து வருகின்றனர்.


இந்த விழாவின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 


தற்போது சாமிதோப்பு தலைமைப் பதியிலும், திருச்செந்தூர் கடற்கரை ஓரம் அமைந்துள்ள அவதார பதியிலும் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது. அய்யா வழி பக்தர்கள் அனைவரும் ஒருமித்த உணர்வுடன் இந்த விழாவைக் கொண்டாடி வருவதால், தென் மாவட்டங்கள் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

  • Share on

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 : மார்ச் இரண்டாவது வாரத்தில் தேதி அறிவிப்பு?

நீதிமன்ற உத்தரவா? சட்ட ஆலோசனையா? - பணி நியமன ஊழல் வழக்கில் தமிழக அரசின் அடுத்த மூவ் என்ன?

  • Share on