• vilasalnews@gmail.com

நீதிமன்ற உத்தரவா? சட்ட ஆலோசனையா? - பணி நியமன ஊழல் வழக்கில் தமிழக அரசின் அடுத்த மூவ் என்ன?

  • Share on

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடந்ததாகக் கூறப்படும் பணி நியமன முறைகேடுகள் தொடர்பான வழக்கில், தமிழக அரசு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முக்கியத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.


கடந்த 2024-25 காலகட்டத்தில், நகராட்சி நிர்வாகத் துறையில் உதவிப் பொறியாளர் மற்றும் இளநிலைப் பொறியாளர் உள்ளிட்ட 2,538 பணியிடங்களை நிரப்புவதில் பெரும் ஊழல் நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஒவ்வொரு பணிக்கும் தலா 25 லட்சம் முதல் 35 லட்சம் ரூபாய் வரை லஞ்சமாகப் பெறப்பட்டதாகவும், டெண்டர் மற்றும் ஒப்பந்தங்களில் முறைகேடுகள் செய்ததன் மூலம் ஒட்டுமொத்தமாக சுமார் 1,020 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருக்கலாம் என்றும் அமலாக்கத்துறை தெரிவித்தது. இது தொடர்பான 232 பக்கங்கள் கொண்ட விரிவான ஆதாரங்களை அமலாக்கத்துறை தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் அனுப்பி வைத்திருந்தது.


இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து அதிமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா தலைமையிலான அமர்வு, கடந்த பிப்ரவரி 20-ம் தேதி முக்கிய உத்தரவைப் பிறப்பித்தது. அதில், அமலாக்கத்துறை வழங்கிய ஆதாரங்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.


இருப்பினும், நீதிமன்றம் விதித்த காலக்கெடுவிற்குள் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. இதைக் கண்டித்து, அப்போதைய லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பு இயக்குநர் ஏ.டி. துரைக்குமார் மீது அதிமுக எம்.பி. இன்பதுரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார்.


இந்த அவமதிப்பு வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை இந்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்வது குறித்து ஆலோசித்து வருவதாகத் தெரிவித்தார். மேலும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 17A-ன் படி, வழக்குப்பதிவு செய்வதற்கு முன்பாக மாநில அரசிடம் முன் அனுமதி பெற வேண்டுமா என்பது குறித்து சட்ட ஆலோசனை கோரப்பட்டுள்ளதாகவும் அவர் நீதிமன்றத்தில் விளக்கினார்.


மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி. ராகவாச்சாரி, நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 10 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் வழக்குப்பதிவு செய்யாதது சட்டமீறல் என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த நீதிமன்ற அவமதிப்பு மனு குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை இரண்டு வாரங்களுக்குள் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

  • Share on

அய்யா வைகுண்டர் 194 வது அவதார திருநாள்: தென் தமிழகத்தில் கோலாகலம்!

வாக்குறுதிகள் என்னாச்சு? அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் டாஸ்மாக் பணியாளர்கள்!

  • Share on