தமிழகத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற்று வரும் பயனாளிகளுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், மார்ச் மாத ஓய்வூதியத்துடன் கூடுதலாக ரூ. 2,000 சிறப்பு நிதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
சமீபத்தில் 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட' பயனாளிகளுக்கு கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ. 2,000 வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அரசின் இதர ஓய்வூதியத் திட்டங்களில் பயன்பெறும் முதியோர்கள், கைம்பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் இத்தகைய சிறப்பு நிதியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. பொதுமக்களின் இந்த கோரிக்கையை ஏற்று, தற்போது இந்த நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகப் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. 29.29 லட்சம் முதியோர் மற்றும் கைம்பெண்களுக்கு மாத ஓய்வூதியத்துடன் சேர்த்து தலா ரூ. 3,200 வழங்கப்பட்டுள்ளது. 5.92 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு, ரூ. 3,500 வழங்கப்பட்டுள்ளது. 2.58 லட்சம் பராமரிப்பு உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4,000 வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர், "நலிவுற்ற மக்களின் கோரிக்கையை ஏற்று, மார்ச் மாத ஓய்வூதியத்துடன் இந்தச் சிறப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிப் பாதையில் எவரையும் பின்தங்க விடமாட்டோம் என்பதே நமது அரசின் இலக்கு," எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக எவ்வித முன் அறிவிப்பும் இன்றி, பயனாளிகளின் கணக்கில் நேரடியாகப் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.



