• vilasalnews@gmail.com

வாக்குறுதிகள் என்னாச்சு? அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் டாஸ்மாக் பணியாளர்கள்!

  • Share on

தமிழகத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (மார்ச் 7) முதல் காலவரையற்ற காத்திருப்புப் போராட்டத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளனர். அரசுடன் ஏற்கனவே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட உடன்பாடுகளை முறையாக அமல்படுத்தவில்லை என்பதே இப்போராட்டத்திற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.


சமீபத்தில் தமிழக அரசு டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஏப்ரல் 1-ம் தேதி முதல் 1,000 ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது. தேர்தல் நெருங்கும் வேளையில் இந்த அறிவிப்பு வந்தாலும், ஊழியர்கள் தரப்பில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஊழியர்கள் சங்கத்தினர் இடைக்கால ஊதிய உயர்வாக 5,000 ரூபாய் கோரியிருந்த நிலையில், அறிவிக்கப்பட்ட சொற்ப உயர்வு தங்களை ஏமாற்றும் வகையில் இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர்.


தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தனசேகரன் இது குறித்துக் கூறுகையில், கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி பல வாக்குறுதிகளை அளித்ததாகத் தெரிவித்தார். 


குறிப்பாக, பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் வழங்குதல், ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஓய்வு பெறும் வயதை 60-ஆக உயர்த்துதல், ஊழியர் கோரிக்கைகளை ஆய்வு செய்ய தனிக் குழு அமைத்தல்.


ஆனால், தற்போது அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்சொன்ன முக்கிய அம்சங்கள் எதற்கும் தெளிவான விளக்கம் அளிக்கப்படவில்லை என்றும், 'குழு' அமைப்பது குறித்த வார்த்தைகூட இடம்பெறவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


அரசு அளித்த வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளதாக உணரும் ஊழியர்கள், நாளை முதல் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் அலுவலகம் முன்பாகத் திரண்டு தங்கள் போராட்டத்தை மீண்டும் தொடங்க உள்ளனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் முன்பே (மார்ச் 10-க்குள்) அரசு தங்களை அழைத்துச் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி, முறையான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.


  • Share on

நீதிமன்ற உத்தரவா? சட்ட ஆலோசனையா? - பணி நியமன ஊழல் வழக்கில் தமிழக அரசின் அடுத்த மூவ் என்ன?

பட்டா இல்லாத நிலம் சட்டப்படி செல்லுமா? போலி ஆவணங்களால் ஏமாறாமல் இருப்பது எப்படி? நிலம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை!

  • Share on