தமிழக அரசியலில் தற்போதைய பேசுபொருளாக மாறியிருப்பது இயக்குநர் கிருத்திகா உதயநிதியின் சமூக வலைதளப் பதிவுதான். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மனைவியான இவர், தனது எக்ஸ் (X) பக்கத்தில் 'பிரபலம்' குறித்த ஒரு தத்துவார்த்த விளக்கத்தை அளித்துள்ளார். இது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை மறைமுகமாக விமர்சிப்பதாக அரசியல் வட்டாரங்களில் விவாதிக்கப்படுகிறது.
தனது பதிவில், "ஒரு தனி மனிதனுக்கும், பிரபலத்திற்கும் உள்ள வித்தியாசம் என்பது மக்களின் கண்ணோட்டம்தான். அந்த கண்ணோட்டத்தையே (பிம்பத்தையே) தனது உண்மை நிலை என்று ஒரு பிரபலம் நம்பத் தொடங்குவது, அவரை மிகப்பெரிய சிக்கலில் ஆழ்த்திவிடும். இதன் மூலம் அவர் தனது சுயத்தை இழக்க நேரிடும்," என்று கிருத்திகா குறிப்பிட்டுள்ளார். நேரடியாக யாரையும் குறிப்பிடவில்லை என்றாலும், சமீபகாலமாக விஜய்யின் செயல்பாடுகள் குறித்து எழுந்துள்ள விமர்சனங்களுக்கு இது ஒரு 'அட்வைஸ்' போல அமைந்துள்ளதாக திமுகவினர் பகிர்ந்து வருகின்றனர்.
ஒரே நேரத்தில் திமுக மற்றும் தவெக தொண்டர்கள் மத்தியில் இந்தப் பதிவு டிரெண்டாகி வருகிறது. திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்த விஜய், தனது பிம்பத்தைக் கட்டமைப்பதில் காட்டும் ஆர்வம், யதார்த்த அரசியலில் அவருக்கு கைகொடுக்குமா அல்லது கிருத்திகா சொன்னது போல சிக்கலில் முடியுமா என்பது வரும் காலங்களில் தெரியவரும்.




