நெல்லை மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த நல்லகண்ணு, பள்ளிப் பருவத்திலேயே சமூக மாற்றத்தில் ஆர்வம் காட்டினார்.
ஆசிரியர் பலவேசம் மூலமாக பாரதியார், திரு.வி.க மற்றும் விவேகானந்தரின் படைப்புகள் அவருக்கு அறிமுகமாயின. சாதிக்கட்டமைப்பை உடைப்பதும், சுரண்டலற்ற சமுதாயத்தைப் படைப்பதுமே தனது வாழ்நாள் லட்சியமாகக் கொண்டார். முதலில் காந்திய வழியில் 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் பங்கேற்ற அவர், 18 வயதில் (1943) முறைப்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.
சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் மக்கள் நலனுக்காகப் பல போராட்டங்களை முன்னெடுத்தார் 'தோழர் ஆர்.என்.கே'. உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டார். காவல்துறையின் சித்திரவதைக்கு உள்ளான போதும் சக தோழர்களைக் காட்டிக் கொடுக்காத உறுதி அவரிடம் இருந்தது. இவ்வழக்கிற்காக 7 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார்.
தலித் மக்களுக்கு நிலையான குடியிருப்பு இல்லாத நிலையை மாற்றி, அவர்களுக்கு 'மனை உரிமை' பெற்றுத் தரப் போராடினார். 1970-களில் மடங்களின் வசமிருந்த நிலங்கள் குறித்த விவரங்களைத் திரட்டி, நிலமற்ற விவசாயிகளுக்காகக் குரல் கொடுத்தார்.
சமூகத்தில் பதற்றம் நிலவிய காலங்களில் அமைதியை நிலைநாட்ட அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது. தென் மாவட்டக் கலவரத்தில் தனது மாமனாரை இழந்தபோதும், உணர்ச்சிவசப்படாமல் அமைதிக்காகப் பாடுபட்டார். "சிலர் செய்த தவறுக்காக ஒரு சமூகத்தையே குற்றவாளியாக்க முடியாது" என்ற உயரிய பண்பைக் கடைப்பிடித்தார்.
பாப்பாபட்டி, கீரிப்பட்டி ஊராட்சிகளில் தலித் தலைவர்கள் பதவியேற்க தடையாக இருந்த நிலையை எதிர்த்து மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.
தனது 86-வது வயதிலும் தாமிரபரணி ஆற்றைக் காக்க நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதாடினார். இவரது உணர்வுபூர்வமான வாதத்தால் மணல் கொள்ளை 5 ஆண்டுகளுக்குத் தடுக்கப்பட்டது. எத்தனையோ பதவிகளை (மாநிலச் செயலாளர், தேசியக் குழு உறுப்பினர்) வகித்தாலும், எளிய மனிதராகவே வாழ்ந்து வருகிறார்.
1980 மற்றும் 1999 தேர்தல்களில் தோல்வியடைந்த போதும், தனது கொள்கையிலிருந்து அவர் பின்வாங்கவில்லை. வாக்கு வங்கிக்காக சிறுபான்மையினர் நலனில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்பதில் உறுதியாக இருந்தார்.
2015 சென்னை வெள்ளத்தில் அவர் உயிருக்குப் போராடியபோதும், மற்றவர்களை முதலில் காப்பாற்றச் சொன்னார். அந்த வெள்ளத்தில் அவர் சேகரித்து வைத்திருந்த 2,000-க்கும் மேற்பட்ட அரிய புத்தகங்கள் அழிந்ததே அவரது வாழ்வின் பெரிய சோகமாக அமைந்தது. 2022-ல் தமிழக அரசு வழங்கிய 'தகைசால் தமிழர்' விருதுடன் கிடைத்த 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையையும் அப்படியே அரசு நிவாரண நிதிக்கு வழங்கிய பெருந்தகை அவர்.
எழுந்தாலும் விழுந்தாலும் கடலின் புகழ்பாடும் அலைபோல, கம்யூனிஸ்ட் கட்சியின் ஏற்றத்திலும் இறக்கத்திலும் செங்கொடி சுமந்த சிங்கம் இன்று தனது 101 வது வயதில் நம்மை விட்டு மறைந்தார்



