திருப்பரங்குன்றம் மலை மீதிருக்கும் தீபத்தூணில் மகாதீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக பாஜக மற்றும் முருக பக்தர்கள் பேரவை சார்பில் இன்று (பிப்ரவரி 23, 2026) தமிழகம் முழுவதும் 'கந்த சஷ்டி பாராயண' வழிபாடு நடைபெற்றது.
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, இன்று தனது இல்லத்தில் முருகப் பெருமானுக்குச் சிறப்புப் பூஜைகள் செய்து, கந்த சஷ்டி கவசம் பாடினார். இது "சஷ்டியும் கார்த்திகையும் இணைந்து வரும் இந்த நன்னாளில், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்ற உறுதியுடன் கந்த சஷ்டி கவசம் பாடி முருகனைப் போற்றுவோம். உலக மக்கள் அனைவரும் நலம் பெறப் பிரார்த்திப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பாக நீதிமன்றம் உத்தரவிட்டும், திமுக அரசு அதை நிறைவேற்றவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், பக்தர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தவும் வீடுகள் தோறும் விளக்கேற்றி கந்த சஷ்டி கவசம் பாட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இன்று மாலை 6 மணி முதல் 7 மணி வரை, முருகப் பெருமானுக்காக 6 தீபங்களும், ஊரின் நன்மைக்காக ஒரு தீபமும் என மொத்தம் 7 விளக்குகளை ஏற்றி வழிபாடு செய்யுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றக் கோரி பல ஆண்டுகளாகப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இது தொடர்பாக நீதிமன்றம் சாதகமான தீர்ப்பு வழங்கிய நிலையிலும், தற்போதைய அரசு அதைச் செயல்படுத்தத் தயங்குவதாகக் குற்றம் சாட்டி பாஜகவினர் இந்த ஆன்மீகப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இன்று மாலை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜக தொண்டர்களும் பொதுமக்களும் தங்களது வீடுகளின் முன் தீபமேற்றி, கந்த சஷ்டி கவசம் பாடி தங்களது ஆதரவைத் தெரிவிக்க இருக்கின்றனர்.



