சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறிக் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு முக்கிய காலக்கெடுவை விதித்துள்ளது.
சென்னை நீலாங்கரை முதல் உத்தண்டி வரையிலான பகுதிகளில், கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறி, கடற்கரையிலிருந்து 500 மீட்டர் தொலைவிற்குள் பல சொகுசு பங்களாக்களும், ரிசார்ட்டுகளும் கட்டப்பட்டுள்ளன. இது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த 2018-ஆம் ஆண்டு விதிகளை மீறிய 798 கட்டிடங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.
இந்த பட்டியலில் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் திரைப்பிரபலங்களின் வீடுகளும் அடங்கும். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் பல முக்கிய நபர்களின் கட்டிடங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது.
சுமார் 6 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு, நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் எம். சுதீர்குமார் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. மொத்தம் உள்ள 798 உரிமையாளர்களில் 440 பேர் அரசின் நோட்டீஸை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளனர். இதில் 84 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்கள் இன்னும் நிலுவையில் உள்ளன.
நிலுவையில் உள்ள அனைத்து மேல்முறையீட்டு மனுக்களையும் வரும் மே 31-ஆம் தேதிக்குள் விசாரித்து முடிக்க வேண்டும். கட்டிட உரிமையாளர்கள் தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க மார்ச் 30 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சிஎம்டிஏ கூடுதல் செயலாளர் எஸ். காஞ்சனமாலா இந்த விசாரணையை மேற்கொள்ள வேண்டும். நீதிமன்றத்தின் இந்த உத்தரவே அதிகாரப்பூர்வ அறிவிப்பாகக் கருதப்படும் என்பதால், தனியாக மீண்டும் நோட்டீஸ் அனுப்பத் தேவையில்லை.
இந்த விசாரணையின் போது, ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் பகுதியாக இருப்பதால் உத்தண்டிக்கு அப்பால் உள்ள கடற்கரை ஆக்கிரமிப்புகளையும் கணக்கெடுக்க வேண்டும் என நீதிமன்ற உதவியாளர் தரப்பில் கோரப்பட்டது. இது குறித்துப் பின்னர் பரிசீலிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.



