• vilasalnews@gmail.com

உலக தாய்மொழிகள் தினம்... தமிழே நம் உயிர் - முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி வாழ்த்து!

  • Share on

தாய்மொழியின் முக்கியத்துவத்தை உலகுக்கு உணர்த்தவும், பன்முக கலாசாரத்தைப் போற்றவும் ஆண்டுதோறும் பிப்ரவரி 21-ம் தேதி சர்வதேச தாய்மொழி தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தச் சிறப்புமிக்க நாளில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் தமிழ் மொழியின் பெருமையைப் பறைசாற்றி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.


 "தமிழே என்று அழைப்பதே தனி இன்பம்" தமிழக முதலமைச்சர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் கவிதை வரிகள் அடங்கிய பாடலைப் பகிர்ந்து வாழ்த்தியுள்ளார். "எண்ணற்றோர் ரத்தம் சிந்திப் போராடி மீட்டெடுத்த நம் தாய்மொழி தமிழை, எவ்வளவு புகழாரங்கள் சூட்டி அழைத்தாலும், 'தமிழே' என்று கூப்பிடும்போது கிடைக்கும் உணர்வு ஈடு இணையற்றது." தமிழின் செழுமையை வருங்கால சந்ததியினருக்குக் கொண்டு சேர்ப்பது உலகெங்கும் வாழும் தமிழர்களின் தலையாய பொறுப்பு என அவர் வலியுறுத்தியுள்ளார்.


 "உடலுக்குள் உயிராகி நிற்பது என் தாய்மொழி" மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மொழியின் மீதான தனது காதலைக் கவித்துவமாக வெளிப்படுத்தியுள்ளார். மரபணுவில் தொடங்கி, தாய்ப்பால் வழியாக உணவாகி, செவிகளில் ஒலியாகி, இன்று எனக்குள் உயிராக நிற்பது என் தாய்மொழி தமிழ். இன்பத்திலும் துன்பத்திலும் எனக்குத் துணையாக நிற்பது என் சொல்லான தமிழ்மொழிதான். ஒவ்வொருவருக்கும் அவரவர் தாய்மொழிதான் சுவாசம், என அவர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.


 "உலகின் தொன்மையான மொழிக்கு உறுதி ஏற்போம்" அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள செய்தியில், பாவேந்தர் பாரதிதாசனின் "தமிழுக்கு அமுதென்று பேர்" என்ற வரிகளை நினைவு கூர்ந்துள்ளார். உலகின் தொன்மையான இலக்கண, இலக்கியங்களைக் கொண்ட தமிழ் மொழியைப் பாதுகாக்கவும், ஏனைய மொழிகளுக்கு முன்னோடியாக விளங்கும் தமிழைப் போற்றிப் பேணவும் அனைவரும் இந்நாளில் உறுதியேற்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

  • Share on

தூத்துக்குடியில் தொடங்கும் சாலை ... முடியும் இடமும் திட்டமும் வேறு ரகம்!

கோயில் திருவிழா அழைப்பிதழ்களில் சாதிப் பெயர்களுக்குத் தடை: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

  • Share on