• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் தொடங்கும் சாலை ... முடியும் இடமும் திட்டமும் வேறு ரகம்!

  • Share on

மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைச் சாலையை (ECR) சர்வதேசத் தரத்திற்கு உயர்த்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. அதன் ஒரு பகுதியாக, NH-32 நெடுஞ்சாலையை நீட்டிக்கும் 107 கி.மீ நீளமுள்ள புதிய நான்கு வழிச்சாலைத் திட்டம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.


சென்னையில் இருந்து தூத்துக்குடி வரையிலான 690 கி.மீ தூர சாலைப் பணிகள் ஏற்கனவே பல்வேறு கட்டங்களில் நடைபெற்று வருகின்றன. தற்போது, தூத்துக்குடியிலிருந்து தெற்கே கன்னியாகுமரி வரை இந்தப் பாதையை இணைப்பதன் மூலம், தமிழகத்தின் ஒட்டுமொத்த கிழக்குக் கடற்கரைப் பகுதியும் ஒரு தடையற்ற போக்குவரத்து வளையத்திற்குள் கொண்டு வரப்படுகிறது. இது 'தூத்துக்குடி-திருச்செந்தூர்-கன்னியாகுமரி (TTK) சாலைத் திட்டம்' என அழைக்கப்படுகிறது.


இந்தச் சாலை தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள முடிவைத்தானேந்தல் கிராமத்தில் தொடங்கி, நட்டாத்தி, சிறுத்தொண்டநல்லூர், ஆறுமுகமங்கலம், வாழவல்லான், சேதுக்குவாய்த்தான், ஆறுமுகநேரி, அம்மன்புரம், திருச்செந்தூர், குலசேகரப்பட்டினம், உடன்குடி, மெய்ஞானபுரம் உள்ளிட்ட பகுதிகள் வழியாகயாவும், திருநெல்வேலி மாவட்டத்தின் குட்டம், உவரி, கரைச்சுத்து புதூர், கூடங்குளம், இருக்கன்துறை கடற்கரை கிராமங்கள் வழியாகச் சென்று கன்னியாகுமரிக்கு முன்பாக அஞ்சுகிராமம் அருகே உள்ள கருங்குளத்தில், தற்போதுள்ள திருநெல்வேலி-கன்னியாகுமரி (NH-44) நான்கு வழிச்சாலையுடன் இது இணைகிறது. இதற்கான மொத்த நீளம் 106.9 கி.மீ, கையகப்படுத்தப்பட உள்ள நிலம் 853.09 ஏக்கர் ஆகும். இத்திட்டத்திற்க்காக பொதுமக்கள் கருத்து தெரிவிக்க 21 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மற்றும் உலகப்புகழ் பெற்ற குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் ஆகியவற்றை இந்தச் சாலை நேரடியாக இணைக்கிறது. இதனால் கேரளா மற்றும் வட தமிழகத்தில் இருந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் பயண நேரம் 2 முதல் 3 மணி நேரம் வரை குறையும். இந்த வழித்தடத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் உடன்குடி அனல்  மின் திட்டம் ஆகிய இரண்டு மிகப்பெரிய மின் உற்பத்தி மையங்கள் அமைந்துள்ளன. புதிய நான்கு வழிச்சாலை அமைவதால், இந்த ஆலைகளுக்குத் தேவையான கனரக இயந்திரங்களைக் கொண்டு செல்வது மிகவும் எளிதாகும்.


தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திலிருந்து தெற்கு கடற்கரை கிராமங்களுக்குச் சரக்குகளைக் கொண்டு செல்ல இது ஒரு விரைவுப் பாதையாக அமையும். இது கிழக்கு கடற்கரை பொருளாதார மண்டலத்தை (East Coast Economic Corridor) வலுப்படுத்தி, புதிய தொழிற்சாலைகள் உருவாக வழிவகுக்கும். இந்தச் சாலை NH-44 உடன் இணைக்கப்படுவதால், கன்னியாகுமரியில் இருந்து மதுரை, சேலம் வழியாகப் பெங்களூரு செல்லும் வாகனங்கள் நெரிசல் மிக்க பழைய சாலைகளைத் தவிர்க்க முடியும்.


அரசு தற்போது உத்தேச வழித்தட வரைபடத்தை (Proposed Alignment Map) வெளியிட்டுள்ளது. நில உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் நிலங்கள் கையகப்படுத்தப்படுவது குறித்த ஆட்சேபனைகளை 21 நாட்களுக்குள் மாவட்ட வருவாய் அலுவலர் அல்லது தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் சமர்ப்பிக்கலாம். இந்தக் காலக்கெடுவிற்குப் பிறகு, நில அளவீடு செய்யப்பட்டு எல்லைக் கற்கள் நடப்படும்.


இந்த 107 கி.மீ சாலைத் திட்டம் என்பது வெறும் போக்குவரத்து வசதி மட்டுமல்ல; இது தென்தமிழகத்தின் ஆன்மீகம், தொழில் மற்றும் சுற்றுலாவை ஒருங்கிணைக்கும் ஒரு வாழ்வாதாரப் பாலமாகும். பணிகள் திட்டமிட்டபடி நடந்தால், அடுத்த சில ஆண்டுகளில் தூத்துக்குடி - கன்னியாகுமரி இடையிலான பயணம் மிகக் குறுகிய கால அளவில் சாத்தியமாகும்.

  • Share on

இலங்கை கடற்படை அட்டடூழியம் : ஒரே நாளில் 22 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு!

உலக தாய்மொழிகள் தினம்... தமிழே நம் உயிர் - முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி வாழ்த்து!

  • Share on