தமிழகத்தில் உள்ள மதுப்பிரியர்களுக்குப் பேரதிர்ச்சியூட்டும் வகையில், நாளை (பிப்ரவரி 17) முதல் மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் காலவரையன்றி மூடப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த பல நாட்களாகவே டாஸ்மாக் பணியாளர்கள் பல்வேறு வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, பணியை நிரந்தரம் செய்தல், முறையான ஓய்வூதியத் திட்டம், பணிப் பாதுகாப்பு மற்றும் காலமுறை ஊதியம்.
இந்தக் கோரிக்கைகள் குறித்து அரசுத் தரப்பில் இதுவரை சுமுகமான பேச்சுவார்த்தை நடத்தப்படாததால், போராட்டத்தைத் தீவிரப்படுத்த தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. சி.ஐ.டி.யு மற்றும் ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட முக்கிய தொழிற்சங்கங்கள் இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. இதன்படி, பிப்ரவரி 17-ம் தேதி முதல் ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட உள்ளனர்.
சராசரியாக ரூ.100 கோடிக்கு மேல் தமிழக அரசின் மிக முக்கிய வருவாய் ஆதாரமாக டாஸ்மாக் விளங்குகிறது. தீபாவளி, பொங்கல் போன்ற நேரங்களில் இது பல மடங்கு அதிகரிக்கும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் திடீர் வேலைநிறுத்தத்தால் அரசுக்கு நாளொன்றுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்தச் செய்தி பரவியதுமே, பல இடங்களில் மதுப்பிரியர்கள் முன்னெச்சரிக்கையாக மதுபாட்டில்களை வாங்கிச் சேமிக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் சில கடைகளில் கூட்டம் அலைமோதியதுடன், விற்பனையும் வழக்கத்தை விட அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அனைத்து தொழிற்சங்கங்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்குமா அல்லது அண்ணா தொழிற்சங்கம் போன்ற அமைப்புகள் விலகி நிற்குமா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஒருவேளை முழுமையான வேலைநிறுத்தம் நடந்தால், அதைச் சமாளிக்க அரசு மாற்று ஏற்பாடுகளைச் செய்யுமா அல்லது ஊழியர்களுடன் பேச்சுவார்த்தைக்கு வருமா என்பது இன்று மாலைக்குள் தெரியவரும்.



