தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தகுதித்தேர்வு தேர்ச்சி பெறாமல் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்காக, வரும் ஜூலை மாதம் சிறப்புத் தகுதித் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் வழங்கிய முக்கியத் தீர்ப்பில், பணியில் இருக்கும் அனைத்து ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று உத்தரவிட்டது. இதில் சில முக்கிய நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. பணி ஓய்வு பெற இன்னும் 5 ஆண்டுகள் மட்டுமே உள்ள ஆசிரியர்களுக்கு இந்தத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட வாய்ப்புள்ளது.
தேர்வு எழுத விரும்பாத ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு பெற்றுச் செல்லவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்த அதிரடி உத்தரவால் தமிழகத்தில் சுமார் 1.76 லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவானது. இதனைத் தொடர்ந்து ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, தேர்ச்சி மதிப்பெண்களைக் குறைத்து அவர்களுக்கு எனத் தனியாகச் சிறப்புத் தேர்வை நடத்தத் தமிழக அரசு தற்போது முன்வந்துள்ளது.
தகுதியுள்ள ஆசிரியர்கள் www.trb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். நிகழ்வு தேதி விண்ணப்பப் பதிவு தொடக்கம் பிப்ரவரி 18, விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஏப்ரல் 10 என்று தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தாள் - 1 ஜூலை 4 அன்றும், தாள் - 2 ஜூலை 5 அன்றும் நடைபெறயுள்ளது.
இந்த அறிவிப்பு தற்போது பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்காக மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. மற்ற தேர்வர்களுக்கான வழக்கமான TET தேர்வு குறித்த தெளிவான தகவல் இதில் இடம்பெறவில்லை. இருப்பினும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வருடாந்திர கால அட்டவணையின்படி, பொதுவான தகுதித்தேர்வுகள் ஜூலை மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.



