சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் சென்ற கார் பயங்கர விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஹாடோஸ் சாலையிலிருந்து உத்தமர் காந்தி சாலை நோக்கி துக்ளக் தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கார் மிக அதிவேகமாகச் சென்றதாகக் கூறப்படுகிறது. எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.
மோதிய வேகத்தில் கார் அப்படியே தலைகீழாகக் கவிழ்ந்து உருக்குலைந்தது. காரின் சேதத்தைப் பார்த்தவர்கள் பெரும் அசம்பாவிதம் நடந்திருக்கக்கூடும் என அஞ்சிய நிலையில், நல்வாய்ப்பாக துக்ளக் உயிர் தப்பினார். தற்போது காயங்களுடன் துக்ளக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தின் போது அவர் மது போதையில் இருந்தாரா என்பதை உறுதிப்படுத்த ரத்த மாதிரி சோதனைகள் செய்யப்பட உள்ளன. சாலை பாதுகாப்பு விதிகளை மீறியதே இந்த விபத்துக்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. ஏற்கனவே மன்சூர் அலிகான் மகன் மீது சில குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன.
கடந்த ஆண்டு சென்னை முகப்பேர் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு மெத்தபெட்டமைன் மற்றும் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் துக்ளக் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், கடந்த ஜூலை மாதம் தான் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்தச் சூழலில் தற்போது நிகழ்ந்துள்ள இந்த கார் விபத்து, சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் என ஒரு தரப்பினரும், தொடர் சர்ச்சைகளில் சிக்குவது வருத்தமளிக்கிறது என மற்றொரு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். முழுமையான போலீஸ் விசாரணைக்கு பிறகே விபத்தின் பின்னணியில் உள்ள உண்மைத் தகவல்கள் தெரியவரும்.



