அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் நடைபெற்ற தமிழ்ச் சங்க விழாவில் பங்கேற்ற பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா, அங்கு உணவு பரிமாறிய பெண்ணிடம் சாதி குறித்துக் கேட்டதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி காட்டுத்தீயாய் பரவியது. இது பெரும் விவாத கிளப்பிய நிலையில், இதற்கு ராஜாவும் அவரது குருநாதர் சாலமன் பாப்பையாவும் விளக்கம் அளித்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி 3-ம் தேதி அட்லாண்டாவில் நடந்த நிகழ்வில், ராஜாவுக்கு உணவு வழங்கிய பெண்ணின் சகோதரர் ஒருவர், சாப்பாடு போட்ட இடத்தில் சாதி கேட்கலாமா? எனப் பதிவிட்டிருந்தார். இப்பதிவு வைரலானதை அடுத்து, பலரும் ராஜாவைக் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர்.
இந்த விவகாரம் குறித்து வீடியோ வெளியிட்ட ராஜா, அதில் கூறியிருப்பதாவது:
அமெரிக்காவில் பல தமிழ் குடும்பங்கள் அன்போடு சமைத்துப் போடுவார்கள். ஒருமுறை உணவு மிகவும் சுவையாக இருந்ததால், அது 'செட்டிநாட்டு' முறையா என்றுதான் கேட்டேன். மாறாக 'செட்டியாரா' என சாதி கேட்கவில்லை. யார் என்ன ஜாதி என்று யோசிக்கும் அளவுக்கு எனக்கு அற்பமான புத்தி கிடையாது. என்னைத் தாங்கிப் பிடிக்கும் அந்த மக்களிடம் போய் நான் ஏன் சாதி கேட்கப் போகிறேன்? இது ஒரு தவறான புரிதல் மட்டுமே. என்று ராஜா வீடியோ வெளியிட்டுள்ளார்.
ராஜா கடந்த 45 ஆண்டுகளாக என்னோடு இருக்கிறார். அவர் எப்படிப்பட்டவர் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அவர் என் பிள்ளை போன்றவர். சாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாரதியின் கொள்கையை இதயத்தில் சுமப்பவர் அவர். அவரிடம் சாதியச் சிந்தனை ஒருபோதும் இருக்காது என என்னால் சத்தியம் செய்ய முடியும். நேரடியாக அவரிடம் கேட்டுத் தெளிவு பெற்றிருக்கலாம். அதை விடுத்து சமூக வலைதளங்களில் இப்படிப் பகைமையைப் பரப்புவது தமிழ் வளர்ச்சிக்கும், தமிழர்களுக்கும் அழகல்ல என தனது சீடர் மீதான விமர்சனத்தைக் கண்டு வருத்தமடைந்த பேராசிரியர் சாலமன் பாப்பையா, ராஜாவுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.



