• vilasalnews@gmail.com

நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தம்: தமிழக அரசு ஊழியர்களுக்கு ‘நோ வொர்க் - நோ பே’ எச்சரிக்கை!

  • Share on

மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டத் திருத்தங்களைக் கண்டித்து, நாளை (பிப்ரவரி 12, வியாழக்கிழமை) நாடு தழுவிய அளவில் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்தச் சூழலில், தமிழக அரசு ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றால் ஊதியம் பிடிக்கப்படும் என மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள நான்கு புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளுக்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 29 பழைய சட்டங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய விதிகள், தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிப்பதாகவும், வேலை பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்குவதாகவும் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன.


புதிய தொழிலாளர் சட்டத் திருத்தங்களைத் திரும்பப் பெற வேண்டும். வங்கிகளில் வாரத்திற்கு 5 நாட்கள் வேலை முறையை அமல்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுக்க வேண்டும்.


நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ (SBI), இந்த வேலைநிறுத்தம் காரணமாக வங்கிப் பணிகள் ஓரளவுக்குப் பாதிக்கப்படலாம் எனத் தெரிவித்துள்ளது. இருப்பினும், டிஜிட்டல் சேவைகள் மற்றும் ஏடிஎம் (ATM) மையங்கள் வழக்கம் போல் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


காசோலை தீர்வு, பணப் பரிவர்த்தனை மற்றும் நேரடி வங்கிச் சேவைகளில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. போக்குவரத்து, பாதுகாப்புத் தளவாடம் மற்றும் சுரங்கத் தொழிலாளர்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதால், அத்துறை சார்ந்த பணிகளும் பாதிக்கப்படலாம். வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாகப் பொதுமக்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.


நாளை பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு வேலை இல்லை - ஊதியம் இல்லை என்ற விதிமுறை அமல்படுத்தப்படும். மருத்துவ விடுப்பு தவிர்த்து பிற காரணங்களுக்காக விடுப்பு எடுக்க அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் எவ்விதத் தடையுமின்றி கிடைப்பதை உறுதி செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.


வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்குத் தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்தாலும், ஆளும் கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மத்திய அரசின் பட்ஜெட் மற்றும் தொழிலாளர் கொள்கைகளைக் கண்டித்து நாளை நடைபெறும் இந்தப் போராட்டத்திற்குத் தார்மீக ஆதரவைத் தெரிவித்துள்ளன.

  • Share on

தமிழக அரசுக்கு எதிராக சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன் போர்க்கொடி!

சாப்பாடு போட்ட இடத்தில் சாதி கேட்டாரா? – முகநூல் பதிவால் வந்த வினை; பட்டிமன்ற ராஜா மீது பாயும் விமர்சனங்கள்!

  • Share on