தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுகளில் ஏற்பட்ட நிர்வாகக் குளறுபடிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்பி வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெறவிருந்த இந்தத் தேர்வின்போது வினாத்தாள் எண்களில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக தேர்வுகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த தேர்வர்கள், வெறும் 9,000 பேர் எழுதும் தேர்வைக் கூட சரியாகத் திட்டமிட முடியாதா? எனக் கேள்வி எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, தேர்வாணையத்தின் கட்டுப்பாட்டு அலுவலர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்த விவகாரம் குறித்து சு.வெங்கடேசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தேர்வாணைய அலுவலரை மாற்றுவது மட்டுமே போதுமான நடவடிக்கை அல்ல. போட்டித் தேர்வர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அரசு மீதான நம்பிக்கையைச் சிதைக்கும். தேர்வில் நடந்த தவறுகள் குறித்து விரிவான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.
ஏற்கனவே என்டிஏ (NDA) கூட்டணிக் கட்சிகள் இந்த விவகாரத்தில் விசாரணை கோரி வந்த நிலையில், தற்போது திமுக கூட்டணியில் உள்ள சிபிஎம் கட்சியும் குரல் கொடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக, கார்ல் மார்க்ஸ் சிலை திறப்பு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் இடதுசாரிகளுடனான உறவை உறுதிப்படுத்திய மறுநாளே, கூட்டணியைச் சேர்ந்த எம்பி ஒருவர் அரசை வலியுறுத்திப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



