தமிழகம் முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A முதன்மைத் தேர்வுகள், முன்னெப்போதும் இல்லாத வகையில் நிர்வாகக் குளறுபடிகளால் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதித்துள்ள இந்தச் சம்பவம், அரசின் நிர்வாகத் திறமை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஹால் டிக்கெட்டில் இருந்த பதிவு எண்களுக்கும், தேர்வு மையங்களில் ஒதுக்கப்பட்ட இருக்கை எண்களுக்கும் இடையே ஏற்பட்ட பொருந்தாமையே இந்தத் குழப்பத்தின் தொடக்கப்புள்ளி. அரும்பாக்கம் மற்றும் நந்தனம் தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டில் குளறுபடி ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த 700-க்கும் மேற்பட்ட தேர்வர்கள் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னையில் தொடங்கிய இந்தப் பாதிப்பு மாநிலம் தழுவிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியதால், டிஎன்பிஎஸ்சி வாரியம் தேர்வை ஒத்திவைப்பதாக அறிவித்தது. பல மாவட்டங்களில் தேர்வு தொடங்கி ஒரு மணி நேரம் கழித்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். மாநில அரசியலை மாற்றியமைக்கும் 'தேர்வு வாரிய' அரசியல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இத்தகைய தேர்வு குளறுபடிகள் வெறும் நிர்வாகப் பிரச்சனையாக மட்டுமல்லாமல், ஆட்சி மாற்றத்தைத் தீர்மானிக்கும் காரணியாக மாறியுள்ளன.
மாநில பொதுப்பணித் தேர்வாணையங்கள் (PSC) ஆளுங்கட்சிகளின் வீழ்ச்சிக்கு வித்திட்ட பல முன்னுதாரணங்கள் இந்திய அரசியலில் உள்ளன. தெலங்கானா மாநிலத்தில் 2023 நடைபெற்ற வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு கால அட்டவணையில் ஏற்பட்ட குளறுபடிகளால் 30 லட்சம் இளைஞர்கள் ஆத்திரமடைந்தனர். இதுவே பி.ஆர்.எஸ் கட்சியின் 10 ஆண்டுகால ஆட்சி வீழ்ந்து காங்கிரஸ் மலர முக்கியக் காரணமாக அமைந்தது. ராஜஸ்தான் மாநிலத்தில் 12-க்கும் மேற்பட்ட தேர்வு முறைகேடுகள் மற்றும் 'பேப்பர் லீக்' சம்பவங்கள் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக மிகப்பெரிய அலை வீசக் காரணமாகி, பாஜக ஆட்சியைப் பிடித்தது மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் புகழ்பெற்ற 'வியாபம்' ஊழல், பல ஆண்டுகளாக பாஜகவின் பிம்பத்தைச் சிதைத்து, 2018-ல் காங்கிரஸ் நூலிழையில் வெற்றிபெற ஒரு கருவியாக அமைந்தது.
இந்த விவகாரத்தில் அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன. எடப்பாடி பழனிசாமி "திமுக ஆட்சியில் நிர்வாகம் எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி. தொழில்நுட்பக் கோளாறு என்று கூறி தப்பிக்க முயலும் அரசு, இளைஞர்களின் பல ஆண்டுகால உழைப்பைச் சிதைத்துவிட்டது," எனச் சாடியுள்ளார். தவெக தலைவர் விஜய்யும் தனது கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இருப்பினும், பிற மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் வீதியில் இறங்கிப் போராடியதைப் போல, தமிழகத்தில் அதிமுக மற்றும் தவெக இரண்டுமே களப் போராட்டங்களை முன்னெடுக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. ஒரு மிகப்பெரிய அரசியல் வாய்ப்பை இரு கட்சிகளுமே அறிக்கையோடு சுருக்கிக் கொண்டதாகப் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். பிப்ரவரி 8-ம் தேதி நடக்கவிருந்த கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு (தாள் I) தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 22-ம் தேதி திட்டமிடப்பட்ட பொது அறிவுத் தேர்வு (தாள் II) குறித்தும், புதிய தேர்வு தேதிகள் குறித்தும் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.



