தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கேடு குறித்த விவாதங்கள் அனல் பறந்து வரும் நிலையில், மதுரையில் அரங்கேறியுள்ள இந்த கொடூரக் கொலை சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள சாமநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகர பாண்டியன் (எ) செந்தில்குமார் (33). அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவரான இவர், நெடுங்குளம் சாலையில் டீக்கடை நடத்தி வந்தார். இவருக்கு ஒரு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
வழக்கம்போல இன்று காலை 6 மணியளவில் செந்தில்குமார் கடையைத் திறந்தபோது, அங்கு மறைந்திருந்த மர்ம கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் நிலைகுலைந்த செந்தில்குமாரின் தலையைத் துண்டித்துவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.
செந்தில்குமாரின் கடை முன்பு அடிக்கடி ஒரு கும்பல் மது அருந்திவிட்டு, பொதுமக்களுக்கு இடையூறு செய்து வந்துள்ளது. இதனைச் செந்தில்குமார் பலமுறை கண்டித்துள்ளார். இங்கு அமர்ந்து குடிக்கக் கூடாது என இன்று காலையும் அவர் எச்சரித்த நிலையில், ஆத்திரமடைந்த கும்பல் இந்த பயங்கர செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் கொலை, கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக அதிமுக, பாஜக, தவெக, நாம் தமிழர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில், ஒரு அரசியல் கட்சிப் பிரமுகர் மக்கள் நடமாட்டம் உள்ள நேரத்தில் கொல்லப்பட்டது பதற்றத்தை அதிகரித்துள்ளது.
பொதுமக்களுக்கு இடையூறு செய்ததை தட்டிக்கேட்ட ஒருவருக்கு நேர்ந்த இந்த கதி, தமிழகத்தின் பாதுகாப்பு கேள்விக் குறியாக உள்ளதையே காட்டுகிறது என சமூக ஆர்வலர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். தற்போது சாமநத்தம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், இந்த கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.



