ஜல்லிக்கட்டு போல் சேவல் சண்டைக்கும் சட்டத்திருத்தம் கொண்டு வந்தால் அனுமதி வழங்கலாம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் சேவலின் காலில் கத்தி கட்டாமல் சண்டை நடத்துவதற்கு அனுமதி கேட்டு தாக்கல் செய்த மனு மீது இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறுகையில், "ஜல்லிக்கட்டு நடத்தியது போல், சேவல் சண்டை நடத்துவதற்கு ஒரு சட்ட திருத்தம் அரசு இயற்றினால், சேவல் சண்டைக்கு அனுமதி வழங்கலாம் என கூறி சேவல் சண்டைக்கு அனுமதி கோரிய மனுவை அவர் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்".
சேவல் சண்டை
சேவல் சண்டையானது, சேவல் கட்டு, கோட்சை, வெப்போர், வெற்றுக் கால் சண்டை, கட்டு சேவல் சண்டை என ஒவ்வொறு மாவட்டத்திற்கும் ஏற்ப வெவ்வேறு விதிகளோடு பல்வேறு பெயர்களில் நடத்தப்படுகின்றது.
கிராமப்புறங்களில் சேவல் சண்டை இல்லாமல் காணும் பொங்கல் நிறைவடையாது. ஜல்லிக்கட்டு காளைகளை எப்படிப் பொங்கல் பண்டிகைக்கு 3 மாதங்களுக்கு முன்பு இருந்து தயார் படுத்துகிறார்களோ அதே போல சண்டை சேவல்களையும் தயார்படுத்துகின்றனர்.
பொதுவாகவே சேவல்களுக்கு சக சேவல்களை அடக்கி ஆள வேண்டும் என்ற மன நிலை உண்டு. ஒரே கூண்டில் அடைக்கப்பட்ட சேவல்களாக இருந்தாலும் கூட தங்களுக்குள் யார் பெரியவர் என்ற போட்டி குணம் இருக்கும். அதனால் அவற்றைச் சண்டையிட செய்வது என்பது பயிற்சியாளர்களுக்கு பெரிய கஷ்டம் இல்லை. சண்டைப் பயிற்சியோடு, நீச்சல் பயிற்சி, நடைப் பயிற்சி என சில கடுமையான உடற்பயிற்சிகளும் சேவல்களுக்கு கொடுக்கப்படுகிறது.
சேவல் சண்டையை தொடங்குவதற்கு 21 நாட்களுக்கு முன்பு எந்த சேவலுடன் எந்த சேவலை மோத விடுவது என்பது தீர்மானிக்கப்படும். இது 'ஜோடி சேர்த்தல்' என்று அழைக்கப்படுகிறது. சேவல்களின் உயரம், வலு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு ஜோடி சேர்க்கப்படுகிறது. சண்டைக்கு முன்னதாக சேவல்களில் கால் நகங்களையும், காலில் இருக்கும் முட்களையும் கூர்மையாக்கி தயார் செய்வார்கள்.
15 நிமிடம் சண்டை, 15 நிமிடம் ஓய்வு என ஒரு மணிநேரம் சண்டை நடக்கும். இதில் சேவல் சோர்வில் விழுந்து விட்டாலோ அல்லது சண்டையில் இறந்துவிட்டாலோ அந்த சேவல் தோற்றதாக அறிவிக்கப்பட்டு வென்ற சேவலின் உரிமையாளருக்கு சண்டை களத்திலேயே பரிசுகள் வழங்கப்படும். பல இடங்களில் தோற்ற சேவலையும் வென்றவருக்கு பரிசாக அளிப்பார்கள்.
இந்த சேவல் சண்டை போட்டிகள் தமிழகத்தில் ராமநாதபுரம், சேலம், புதுக்கோட்டை, தஞ்சை, மதுரை, பட்டுக்கோட்டை, வாடிப்பட்டி, சோழவந்தான், நாகர்கோவில் மற்றும் வேலூர் உள்ளிட்டஇடங்களில் நடத்தப்பட்டுவந்தன. இந்த போட்டி பொங்கல் விழாவின் போது நடத்தபட்டு வந்த நிலையில் சேவல் சண்டை சூதாட்டமாக மாறிவிட்டதாக கூறி 2009ஆம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.



