2 நாட்கள் பயணமாக தமிழ்நாடு வந்த பாரத பிரதமர் மோடி இன்று கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜராஜ சோழன் முப்பெரும் விழாவில் கலந்துகொண்டார்.
அப்போது, ராஜராஜ சோழனின் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். அதனை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு பிரம்மாண்டமாக சிலை அமைக்கப்படும் என்றும், சோழ சாம்ராஜ்யம் பாரதத்தின் பொற்காலங்களில் ஒன்று என்றும் கூறினார்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப் பயணமாக நேற்று தமிழ்நாட்டிற்கு வந்திருந்தார். மாலத்தீவில் இருந்து தனி விமானம் மூலமாக தூத்துக்குடி வந்த அவர், ரூ.4,800 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இதையடுத்து, தூத்துக்குடி விமான நிலையத்தில் புதியதாக கட்டப்பட்டிருந்த விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
தொடர்ந்து, தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலமாக நேற்று இரவு திருச்சி வந்து, அங்குள்ள தனியார் ஓட்டலில் ஓய்வெடுத்தார். பின்னர், இன்று காலை திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் 11.50 மணியளவில் அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரத்துக்கு வந்தடைந்தார். சோழங்கத்தில் தரையிறங்கிய பிரதமர் மோடிக்கு அதிமுகவினர், பாஜகவினர், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரதமர் மோடி தமிழக பாரம்பரிய உடையான வெள்ளை வேட்டி சட்டை அணிந்திருந்தார். தொடர்ந்து, ரோடு ஷோ மேற்கொண்ட மோடி காரில் நின்றவாறு அங்கிருந்த மக்களைப் பார்த்து கையசைத்து சென்றார். வழிநெடுகிலும் பொதுமக்கள் மலர் தூவி பிரதமர் மோடியை வரவேற்றனர். ரோடு ஷோவை தொடர்ந்து கங்கைகொண்ட சோழபுரம் கோயிலுக்கு அவர் வந்தடைந்தார்.
பெருவுடையார் கோயிலின் வாசலில் பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, கோயிலுக்குள் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் கலந்து கொண்டார். இசைஞாணி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை கண்டு ரசித்தார். ராஜேந்திர சோழனின் பெருமையை பறைசாற்றும் வகையில் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
வணக்கம் சோழ மண்டலம். நமச்சிவாய வாழ்க, நாதன் தாழ் வாழ்க, சிவனின் தரிசனமும், இளையராஜாவின் இசையும் என் ஆன்மாவை ஆனந்தத்தில் ஆழ்த்தியது. ஆயிரம் ஆண்டுகள் நிறைவு செய்த பிரகதீஸ்வரர் ஆலயத்தில் இறைவனை தரிசித்த பெரும் பேறு எனக்கு கிடைத்துள்ளது. சோழர்கள் குறித்த கண்காட்சியை பார்த்து வியந்து போனேன்.
சைவ பாரம்பரியத்தில் தமிழகம் முக்கிய மையமாக திகழ சோழர்களே காரணம். சோழ அரசர்களின் அரசியல், வணிக தொடர்பு மாலத்தீவு தொடங்கி கிழக்கு ஆசிய நாடுகள் வரை பரவி இருந்தது. சோழர்களின் சாதனைகள் இந்தியாவின் பலத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. ராஜ ராஜன், ராஜேந்திர சோழன் இரு பெயர்களும் பாரதத்தின் அடையாளங்கள்.
பிரிட்டிஷாருக்கு முன்பே ஜனநாயகத்துக்கான முன்னோடி சோழர் ஆட்சி தான். ஜனநாயகத்தின் பிறப்பிடமாய் சோழர்களின் குடவோலை முறை திகழ்ந்தது. நீர் மேலாண்மையில் ஆதிக்கம் செலுத்தியவர்கள் சோழர்கள். உலகின் கட்டடவியல் அற்புதங்களில் ஒன்று கங்கை கொண்ட சோழ புரம். பண்பாட்டால் நாட்டை ஒருங்கிணைத்தவர்கள் சோழர்கள்.
சோழ சாம் ராஜ்ஜியம் பாரதத்தின் பொற்காலங்களில் ஒன்று. சைவ பாரம்பரியத்தில் தமிழகம் முக்கிய மையமாக திகழ சோழர்களே காரணம். பாரதத்தின் வலிமையை ஆபரேஷன் சிந்தூர் உணர்த்தியது. நாடு முழுவதும் ஆபரேஷன் சிந்தூரை மக்கள் கொண்டாடி வருகின்றனர். புதிய இந்தியாவுக்கு வரைபடம் தருகிறது சோழர் சாம் ராஜ்ஜியம். தமிழகத்தில் ராஜ ராஜனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் என்றார்.



