தமிழ்நாடு முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பெண் குழந்தை பிறந்தால் ரூ.50,000 வைப்புத் தொகை கொடுக்கப்படுகிறது. இத் திட்டத்தின் நோக்கம், திட்டத்தின் விவரங்கள், விண்ணப்பிக்கும் முறை, தகுதி என அனைத்து விவரங்களையும் அறியலாம்.
முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்
1992 ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சரால் அறிமுகப்படுத்தப்பட்ட முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், பெண் குழந்தைகளின் நலனுக்கான முன்னோடி மற்றும் பாதையை மாற்றிமைக்கும் திட்டமாகும்.
பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், அரசின் நேரடி முதலீட்டின் மூலம் பெண் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அதிகாரம் அளித்தல் மூலம் பாலினப் பாகுபாட்டைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டதாகும். இந்தத் திட்டத்திற்காக, ஆண்டு வருமான வரம்பு ரூ.1,20,000/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் நோக்கம்:
பெண் குழந்தைகள் பள்ளியில் சேர்க்கை மற்றும் தக்கவைத்தலை ஊக்குவித்தல் மற்றும் குறைந்தபட்சம் இடைநிலை வரையிலான கல்வியை உறுதி செய்தல். பெண் குழந்தைகளை 18 வயதுக்குப் பிறகே திருமணம் செய்ய ஊக்குவித்தல். இரண்டு பெண் குழந்தைகளுடன் குடும்பக் கட்டுப்பாடு நெறிமுறையைப் பின்பற்ற பெற்றோர்களை ஊக்குவித்தல். பெண் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் பெண் குழந்தைகளுக்கு சமூக மற்றும் நிதி அதிகாரம் அளித்தல். பெண் குழந்தைகளின் நிலையை மேம்படுத்துவதில் குடும்பத்தின் பங்கை வலுப்படுத்துதல்.
திட்டத்தின் கீழ் வைப்பு முறை:
திட்டம்-I:
ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டுமே பிறந்திருப்பின், அப்பெண் குழந்தையின் பெயரில் நிலையான வைப்புத் தொகையான ரூ.50,000/- தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இந்த வைப்புத்தொகை ரசீது நகல் பெண் குழந்தையின் குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது.
திட்டம்-II:
ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே பிறந்திருப்பின், அப்பெண் குழந்தைகளின் பெயரில் நிலையான வைப்புத்தொகையான தலா ரூ.25,000/- தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இந்த வைப்புத்தொகை ரசீது நகல் பெண் குழந்தைகளின்குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது.
மேற்கூறிய வைப்புத்தொகை ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒருமுறை புதுப்பிக்கப்பட்டு, 18 வயது நிறைவடைந்தவுடன், வட்டியுடன் சேர்த்து முதிர்வுத்தொகை பெண் குழந்தைக்கு வழங்கப்படும். இந்தப் பலனைப் பெற, பெண் குழந்தைகள் 10ம் வகுப்பு பொதுத் தேர்வெழுத வேண்டும். இவ்வாறு, முதிர்வுத் தொகையானது பெண் குழந்தைகளின் உயர்கல்வியைத் தொடர உதவும்.
தகுதிகள்:
பெற்றோரில் ஒருவர் 35 வயதிற்குள் அரசாங்க மருத்துவமனையில் கருத்தடை செய்ததற்கான சான்று அளிக்க வேண்டும்.
பெண் குழந்தை மட்டுமே இருக்க வேண்டும். ஆண் வாரிசு இருக்கக் கூடாது.
ஆண்டு வருமான வரம்பு ரூ.1,20,000/-க்குள் இருக்க வேண்டும்.
இரண்டாவது குழந்தைக்கு 3 வயது முடிவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கும்போது சில முக்கிய சான்றிதழ்களைப் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.
1. ஆண் குழந்தை இல்லை என்ற சான்றிதழ்
2. குடும்ப புகைப்படம்
3. திருமணச் சான்றிதழ்
4. இருப்பிட சான்றிதழ்
5. கருத்தடை செய்துகொண்டதற்கான சான்றிதழ்
6. சாதிச் சான்றிதழ்
7. குடும்ப அட்டை
8. பெற்றோரின் ஆதார் அட்டை
9. பெண் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்
10. குடும்ப வருமான சான்றிதழ்.
மேற்கண்ட சான்றிதழ்கள் சிலவற்றின் அசல் சான்றிதழும், சில சான்றிதழ்களின் அசலை பெற்றோர் வைத்துக்கொண்டு நகலையும் இணைக்க வேண்டும்.
பெண் குழந்தையின் பிறப்பு சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆண் குழந்தை இல்லை என்ற சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் போன்றவற்றை மாநகராட்சி அலுவலகத்திலும், கருத்தடை செய்துகொண்டதற்கான சான்றிதழ் மருத்துவமனையிலும் பெற வேண்டும்.
சாதி சான்றிதழ் வருவாய்த் துறை அலுவலகத்திலும், திருமணச் சான்றிதழை துணை பதிவாளர் அலுவலகத்திலும் பெற்றுக் கொள்ள வேண்டும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க:
அனைத்துச் சான்றிதழ்களுடன் பொது சேவை மையத்துக்குச் சென்று பயோ மெட்ரிக் தகவல்களை உறுதி செய்து கொள்ள வேண்டும். அவர்கள் அளிக்கும் விண்ணப்பத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து, சான்றிதழ்கள் அனைத்தையும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்கான அத்தாட்சி ரசீது வழங்கப்படும். அதனை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதில் தனித்துவ அடையாள எண் இடம்பெற்றிருக்கும்.
நேரில் விண்ணப்பிக்க:
வட்டார வளர்ச்சி அலுவலகம் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் குழந்தையின் தாய்தான் நேரில் சென்று விண்ணப்பத்தைக் கொடுக்க வேண்டும்.
கேட்டிருக்கும் சான்றிதழ்கள் சரியாக இருக்கிறதா என்பதை, அசல் சான்றிதழ்களுடன் அதிகாரிகள் சரிபார்த்து விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்வார்கள். அப்போது விண்ணப்பித்தற்கான உறுதி செய்யும் ரசீது வழங்கப்படும். இதில், விண்ணப்பித்த நாள் உள்ளிட்ட விவரங்கள் இருக்கும். இவை இருந்தால்தான் வைப்புத் தொகை சான்றிதழ் பெற முடியும்.
விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது குறித்து 2 மாத காலம் அல்லது அதிகாரிகள் சொல்லும் குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் உறுதி செய்த ரசீதுடன் நேரில் சென்று பெற்றோர் உறுதி செய்துகொண்டு, வைப்புத் தொகைக்கான நகல் ஆவணம் வழங்கப்படும்.
முன்பு, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பெற்றோர் நேரில் சென்று, புதுப்பிக்கும் வசதி இருந்தது. கொரோனா காலத்துக்குப் பிறகு, தானாகவே, கணக்குப் புதுப்பிக்கும் முறை கொண்டு வரப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதிர்வுத் தொகைக்கு விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பித்த பெண் குழந்தைகளில் ஒருவருக்கு 18 வயது பூர்த்தியானதும், முதிர்வுத் தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும். அந்தப் பெண்ணின் 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆதார் சான்றிதழ், வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல், மகள் மற்றும் தாயின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், பெண் குழந்தைகள் திட்டத்துக்கு விண்ணப்பித்து வைப்பு வைக்கப்பட்டதற்கான ஆவணம் என அனைத்தையும் இணைத்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டும். முதிர்வுத் தொகை, விண்ணப்பித்த ஆண்டு, குழந்தைகள் பிறந்த ஆண்டுக்கு ஏற்ப மாறுபடும். இதற்கு விண்ணப்பித்ததும், குறிப்பிட்ட மாத காலத்துக்குள், பெண்ணின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.



