ஈரானில் நிலவி வரும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு, அங்குள்ள அமெரிக்க குடிமக்கள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க தூதரகம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதிபர் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கான ரகசிய ராணுவத் திட்டங்களை வகுத்து வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணிப்பதற்குப் பதிலாக, அமெரிக்கா தனது பலத்தைக் காட்டும் விதமாக யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் உள்ளிட்ட அதிநவீன போர்க்கப்பல்களை ஈரான் கடல் பகுதிக்கு அனுப்பியுள்ளது. இந்த பிரம்மாண்ட போர்க்கப்பலில் 90-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் தயார் நிலையில் உள்ளன.அணு ஆயுதங்களால் மட்டுமே இந்த கப்பலைச் சேதப்படுத்த முடியும் என்கிற அளவிற்கு இது வலிமை வாய்ந்தது எனக் கூறப்படுகிறது.
எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் என்ற அச்சம் நிலவுவதால், முன்னெச்சரிக்கையாகத் தனது நாட்டு மக்களை அமெரிக்கா வெளியேற்றி வருகிறது.
ஈரானின் அணுசக்தி திட்டங்களே இந்த மோதலுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. ஈரான் தனது அணுசக்தி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அணு ஆயுதங்களைத் தயாரித்துவிடக் கூடாது என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது.
ஈரான் புதிய அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
பேச்சுவார்த்தையில் ஈரான் இன்னும் இறுதி முடிவு எடுக்காத நிலையில், ராணுவ பலத்தைக் காட்டி ஈரானைப் பணிய வைக்க அமெரிக்கா முயன்று வருகிறது.
அமெரிக்க வெளியுறவுத்துறை கடந்த சில நாட்களாகவே இத்தகைய எச்சரிக்கைகளை விடுத்து வந்தாலும், தற்போது ராணுவ நகர்வுகள் தீவிரமடைந்துள்ளதால் இந்த அறிவிப்பு உலக நாடுகளிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது.



