அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவில் தற்போது கடும் விரிசல் ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்தும் வகையில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஆவேசமாக உரையாற்றியுள்ளார். அமெரிக்கா தங்களை ஒரு பயன்படுத்தித் தூக்கி எறியும் பொருளாக கருதுவதாக அவர் கூறியிருப்பது உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிகழ்ந்த போரில், இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையைத் தாக்குப் பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் சரணடைந்தது. அப்போது போர் நிறுத்தத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தான் காரணம் என அவர் உரிமை கோரினார். இந்திய தரப்பு இதனை மறுத்த போதிலும், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ட்ரம்ப்பை புகழ்ந்ததோடு, அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இத்தகைய சூழலில், நாடாளுமன்றத்தில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், அமெரிக்காவை நம்பியது பாகிஸ்தான் செய்த மிகப்பெரிய வரலாற்றுத் தவறு எனப் புலம்பியுள்ளார். அமெரிக்கா தனது சுயநலத்திற்காக பாகிஸ்தானைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. தேவை முடிந்தவுடன் ஒரு காகிதத்தைப் போல நம்மைத் தூக்கி எறிந்துவிட்டது.
1999-க்குப் பிறகு ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்காவுடன் கைகோர்த்தது மிகப்பெரிய ஆபத்தாக முடிந்தது. தேவையற்ற போர்களில் நுழைந்ததால் பாகிஸ்தான் இன்று நிலையற்ற தன்மையைச் சந்தித்து வருகிறது. ஜியா-உல்-ஹக் மற்றும் பர்வேஸ் முஷாரஃப் போன்ற ராணுவத் தளபதிகள், 'ஜிஹாத்' என்ற பெயரில் பாகிஸ்தானியர்களை அந்நிய நாட்டுப் போர்களில் ஈடுபடுத்தினர். அதன் கசப்பான விளைவுகளைத் தான் இன்று நாடு அனுபவிக்கிறது.
அமெரிக்கா தனது நோக்கங்களை நிறைவேற்றிக் கொண்ட பிறகு பாகிஸ்தானைக் கைவிட்டுவிட்டது. தற்போது அதன் பாதிப்புகளை பாகிஸ்தான் தனித்து எதிர்கொள்ள வேண்டிய சூழலில் உள்ளது என்று கவாஜா ஆசிப் வருத்தத்துடன் தெரிவித்தார். இந்த வெளிப்படையான பேச்சு, அமெரிக்க - பாகிஸ்தான் உறவில் மேலும் சிக்கலை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



