• vilasalnews@gmail.com

மத்திய கிழக்கு போர்: அமைதிக்கு ஈரான் விதிக்கும் 3 நிபந்தனைகள் - முடிவுக்கு வருகிறதா மோதல்?

  • Share on

மத்திய கிழக்கில் இஸ்ரேல்-அமெரிக்கக் கூட்டணிக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் இரண்டாவது வாரமாகத் தீவிரமடைந்துள்ள நிலையில், சர்வதேச அளவில் இது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மோதலை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் மூன்று முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளது.


கடந்த பிப்ரவரி 28-ம் தேதி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் இணைந்து ஈரான் மீது அதிரடித் தாக்குதலைத் தொடங்கின. இந்தத் தாக்குதலின் ஆரம்பத்திலேயே ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து, ஈரானின் முக்கிய நகரங்களைக் குறிவைத்துத் தாக்குதல்கள் நீடித்தன. இதற்குப் பதிலடியாக, ஈரான் இஸ்ரேலிய நிலப்பகுதிகள் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.


போர் காரணமாக உலகளாவிய பொருளாதார மற்றும் விநியோகச் சங்கிலி பாதிப்புகள் ஏற்பட்டுள்ள சூழலில், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயார் என அறிவித்துள்ளார். 


ஆனால், அதற்கு அவர் மூன்று நிபந்தனைகளை விதித்துள்ளார். ஈரானின் இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டப்படி அந்நாட்டிற்குள்ள உரிமைகளை அமெரிக்காவும் இஸ்ரேலும் அங்கீகரிக்க வேண்டும்.  இந்தத் தாக்குதல்களால் ஈரானுக்கு ஏற்பட்ட சொத்து மற்றும் உயிர்ச் சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும். வருங்காலத்தில் ஈரான் மீது மீண்டும் இது போன்ற ஆக்கிரமிப்புத் தாக்குதல்கள் நடத்தப்படாது என்பதற்குச் சர்வதேச அளவில் உறுதியான பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்.


ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களுடனான ஆலோசனையின் போது, பிராந்திய அமைதிக்கான ஈரானின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளேன். இந்த மூன்று நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என அதிபர் பெசெஷ்கியான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


அமைதிக்கு ஒருபுறம் வழிவகுத்தாலும், ஈரானிய ஆயுதப் படைகளின் செய்தித் தொடர்பாளர் அபோல்ஃபாஸ்ல் ஷெகார்ச்சி அமெரிக்காவிற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் துறைமுகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், பாரசீக வளைகுடாவில் உள்ள எந்தவொரு பொருளாதார மையமும் பாதுகாப்பாக இருக்காது என்றும், போர் பிராந்தியம் முழுவதும் பரவும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.


உச்ச தலைவர் கமேனியின் மறைவுக்குப் பழிவாங்கத் துடித்த ஈரான், தற்போது இறங்கி வந்து நிபந்தனைகளை விதித்துள்ளது ஒரு முக்கியத் திருப்பமாகக் கருதப்படுகிறது. எனினும், ஈரானின் இந்த நிபந்தனைகளை அமெரிக்காவும் இஸ்ரேலும் ஏற்குமா அல்லது போர் மேலும் தீவிரமடையுமா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.

  • Share on

மத்திய கிழக்கில் போர் மேகங்கள்: அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் மற்றும் அதன் நட்புப் படைகள் தீவிரத் தாக்குதல்!

  • Share on