முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு மீதான விசாரணை தூத்துக்குடி நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரால் நேற்று முன்தினம் காலையில் கைது செய்யப்பட்ட ஜி.வி.மார்க்கண்டேயன் எம்எல்ஏவிடம், மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்துச் சுமார் 11 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்குப் பின்னர், அவரை இரவில் தூத்துக்குடி 1-வது நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சுமதி முன்னிலையில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.
நீதிமன்றத்தில் நடைபெற்ற வாதங்களின் போது, மார்க்கண்டேயன் எம்எல்ஏவைக் காவல் எடுத்து விசாரிக்கக் காவல்துறையினர் தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார். தொடர்ந்து, அவரை ஆகஸ்ட் மாதம் 3-ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து மார்க்கண்டேயன் எம்எல்ஏ தரப்பு வழக்கறிஞர்கள் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம் மனு நீதிமன்றத்தால் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. மார்க்கண்டேயன் எம்எல்ஏவின் ஜாமீன் மனு மீதான விசாரணை தூத்துக்குடி நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ளதாக அதிகாரப்பூர்வ ஆன்லைன் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.