• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக வேட்பாளராக களம் இறங்குகிறாரா இயக்குனர் மாரி செல்வராஜ்? உண்மை நிலவரம் என்ன?

  • Share on

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இந்த திரைப்படம் மிகுந்த பாராட்டை பெற்றது. இதையடுத்து, தனுஷ் நடித்த கர்ணன், உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன், தனது சொந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்வை மையமாக வைத்து எடுக்கப்பட்ட வாழை உள்ளிட்ட படங்களை மாரி செல்வராஜ் இயக்கினார்.


இதைத் தொடர்ந்து நடிகர் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் பைசன் படத்தை இயக்கியுள்ளார். அடுத்ததாக தனுஷின் டி56 என்ற படத்தை இயக்க உள்ளார்.


சமூக நீதி கருத்துக்களையும், பட்டியலின மக்களுக்கு எதிரான கொடுமைகளையும் தனது அழுத்தமான கதைகளின் மூலம் திரைப்படங்களாக்கியவர் மாரி செல்வராஜ். இதன் மூலமாக தமிழ் திரையுலகின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக உருவெடுத்து நிற்கிறார் மாரி செல்வராஜ். இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த புளியங்குளம் ஆகும்.


கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தென் மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து இடைவிடாமல் பெய்த கனமழையின் காரணமாக, பல்வேறு இடங்களில் தண்ணீர் சூழ்ந்து நகரமே வெள்ளக்காடாக காட்சியளித்தது. 


இதனால் பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. சாலைகள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களிலும் மழைநீர் சூழ்ந்துள்ள காரணத்தால் பொது போக்குவரத்து முடங்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


அதில், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இயக்குனர் மாரி செல்வராஜின் சொந்த ஊரும் வெள்ளத்தில் மூழ்கியது. மாரி செல்வராஜின் தந்தை, குடும்பத்தினர், உறவினர்களும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டனர். இதனால் இயக்குனர் மாரி செல்வராஜூம் களத்தில் இறங்கி மீட்டு பணியில் ஈடுபட்டார். அது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் அப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.


இதனையடுத்து, தூத்துக்குடி மாவட்டத்திற்கு வெள்ள பாதிப்பு மற்றும் மீட்பு பணிகளை பார்வையிட வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து இயக்குனர் மாரி செல்வராஜ்,  வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் அமைச்சர் ஆய்வு செய்யும் இடத்தில் மாரி செல்வராஜுக்கு என்ன வேலை? என்று கேட்டனர். 


இந்த நிலையில், இதற்கு பதில் அளிக்கும் வகையில் தனது எக்ஸ் தளத்தில் "என் கலையும் கடமையும் நான் யார் என்று நிரூபிப்பது அல்ல.. நீங்கள் யாரென்று உங்களுக்கு நிரூபிப்பது” என்று பதிலளித்திருந்தார்.


மாமன்னன் படத்தின் மூலம் இயக்குனர் மாரிசெல்வராஜூம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் நல்ல உறவு முறையில் இருந்ததால், தங்கள் பகுதி மக்கள் படும் இன்னல்கள் குறித்து அமைச்சர் உதயநிதிக்கு மாரிசெல்வராஜ் கூறிய நிலையில், சேலத்தில் இருந்து உடனடியாக வந்து மீட்புப்பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முடுக்கி விட்டார் என்றும் அப்போது சொல்லப்பட்டது.




ஆனால், நிதியமைச்சரைப் பின்னுக்குத் தள்ளி, தனது படத்தை இயக்கிய மாரி செல்வராஜூடன் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். தன்னுடைய ஆய்வுப் பணிகளுக்கு எல்லாம் இயக்குனர் மாரி செல்வராஜ் ஆக் ஷன் சொல்ல வேண்டும் என உதயநிதி நினைக்கிறார்,” எனக் கூறினார். அப்போதைய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.


தென் தமிழகத்தில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினர் மத்தியில் பாஜக.,வும், நாம் தமிழர் கட்சியினரும் கணிசமான ஆதரவு பெற்றுள்ளனர். அதனால், திமுக விற்கு அவர்கள் மத்தியில் அவ்வளவு ஆதரவு இல்லை. தற்போது, மாரிசெல்வராஜை தன்னுடன் அழைத்துச் சென்றதன் மூலம், அந்த மக்கள் மத்தியில் திமுக விற்கான ஆதரவு அதிகரிக்கும். இதுவும் ஒரு அரசியல் தான் என வெள்ளபாதிப்பை பார்வையிட்ட காலம் முதலே அரசியல் கணக்கு போட ஆரம்பித்த உதயநிதி ஸ்டாலின், தற்போது ஒட்டப்பிடாரம் தொகுதியில் திமுக வேட்பாளராக மாரிசெல்வராஜை களம் இறக்கலாமா என்ற யோசனையில் இறங்கி உள்ளாராம்.


தென் தமிழகத்தில் கணிசமாக உள்ள தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினரின் அடையாளமாக இருக்கக்கூடிய ஜான்பாண்டியன், கிருஷ்ணசாமி உள்ளிடோர் பாஜ - அதிமுக வின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கின்றனர். ஆகவே, அந்த சமூக மக்களின் வாக்குகளை திமுக பக்கம் அறுவடை செய்ய, அந்த சமூக மக்களுக்கு எதிரான கொடுமைகளையும், வலிகளையும் தனது அழுத்தமான கதைகளின் மூலம் திரைப்படங்களாக்கி வரும் இயக்குனர்  மாரி செல்வராஜை கையில் எடுப்பது பலன் கொடுக்கும் என்று கணிக்கிறாராம் துணை முதல்வர் உதயநிதி.


ஆனால், ஒட்டப்பிடாரம் தொகுதியின் தற்போதைய கள நிலவரமே வேறு என்பது தான் நிஜம்.


கடந்த 1995 ஆம் ஆண்டு ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட கொடியங்குளத்தில் ஜாதி கலவரம் வெடித்தது. அந்த வன்முறைக்கு எதிராகவும் பட்டியல் இன மக்களுக்கு ஆதரவாகவும் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குரல் கொடுத்தார். மேலும், ஒட்டப்பிடாரம் வந்து பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தினார். இதன் மூலம் ஒட்டப்பிடாரம் மக்களின் அன்பையும், நன்மதிப்பையும் பெற்றார்.


அதனால், 1996 ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் முதல் முறையாக கிருஷ்ணசாமி களம் இறங்கினார். அப்போது ஜனதா கட்சி சார்பில் அவர் போட்டியிட்டார். இந்த தேர்தலில் 1,148 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று முதல் முறையாக தமிழக சட்டமன்றத்திற்குள் சென்றார். தொடர்ந்து 1997 ஆம் ஆண்டு புதிய தமிழகம் கட்சியை தொடங்கி, அதன் நிறுவனத் தலைவராக இருந்து வருகிறார்.


2001-ல் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சி திமுகவுடன் கூட்டணி வைத்தது. ஒட்டப்பிடாரம் தொகுதியில் கிருஷ்ணசாமி 2-வது முறையாக களமிறங்கினார். ஆனால் இந்த முறை வெறும் 651 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை அவர் இழந்தார்.


பின்னர் 2006-ல் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைத்து ஒட்டப்பிடாரம் தொகுதியில் கிருஷ்ணசாமி போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஒட்டப்பிடாரம் வந்து பிரச்சாரம் செய்தார்.


இருப்பினும் இம்முறையும் கிருஷ்ணசாமிக்கு தோல்வியே கிடைத்தது. 9,444 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ப.மோகனிடம் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தார்.


கடந்த 2011 தேர்தலில் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் இடம் பெற்றது. மீண்டும் ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட்ட கிருஷ்ணசாமி, 25,147 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2-வது முறையாக எம்.எல்.ஏ. ஆனார். அதன் பின்னர் அதிமுகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கிருஷ்ணசாமி கூட்டணியில் இருந்து வெளியேறினார்.


2016 தேர்தலில் புதிய தமிழகம் கட்சி திமுக கூட்டணியில் இடம் பெற்றது. 5 வது முறையாக ஒட்டப்பிடாரம் தொகுதியில் டாக்டர் கிருஷ்ணசாமி மீண்டும் போட்டியிட்டு, அதிமுக வேட்பாளர் சுந்தர்ராஜிடம் தோற்றார்.


2021 சட்டமன்ற தேர்தலில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் 6 வது முறையாக தனித்து போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியால் 6544 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.


1996 காலகட்டத்தில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் பட்டியல் இன சமூக மக்களின் குரலாகவோ, அவர்களுக்கான அதிகாரத்தை பெற்று தருவற்கோ யாரும் இல்லாத நிலையில், டாக்டர் கிருஷ்ணசாமி போன்றோரின் தேவையும், வருகையும் தொகுதி தேவேந்திரகுல வேளாளர் மக்களுக்கு இருந்தது, அதனால் கோவை டாக்டர் கிருஷ்ணசாமி ஒட்டப்பிடாரம் தொகுதி எம்எல்ஏவாக ஆக முடிந்தது. ஆனால், நிகழ்கால ஒட்டப்பிடாரம் தொகுதி அரசியல் சூழலே வேறு. அதற்கு டாக்டர் கிருஷ்ணசாமி 2021 ல் பெற்ற 6544 வாக்குகளே சாட்சி.


அதாவது, ஒட்டப்பிடாரம் தொகுதியில் ஒரு குறிப்பிட்ட சமூக மக்களின் குரலாகவும் இருக்க வேண்டும். அதே வேளையில் அனைத்து சமூக மக்களின் முகமாகவும் இருக்க வேண்டும். அப்பொழுது தான் தொகுதியில் வெற்றி பெறவும் முடியும். தொகுதியை தொடர்ந்து தக்க வைக்கவும் முடியும். 


ஆகவே தான்,  ஒரு குறிப்பிட்ட சமூக மக்களின் குரலாகவும், அதே வேளையில் அனைத்து சமூக மக்களின் முகமாகவும் இருக்கக்கூடிய திமுகவின் நடப்பு எம்எல்ஏவான சண்முகையாவால் 2019 இடைத்தேர்தல், 2021 பொதுத்தேர்தல் என இரண்டு முறை தொடர்ந்து ஒட்டப்பிடாரம் தொகுதியில் வெற்றி பெற முடிந்தது. அவர் மீண்டும் போட்டியிட்டால் மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றியும் பெற முடியும். அதற்கான சூழல் ஒட்டப்பிடாரம் தொகுதியில் சண்முகையாவிற்கு இருக்கிறது.


ஆனால், தற்போது ஒட்டப்பிடாரம் தொகுதியில் எங்களுக்கான குரல் இவரே, அவருக்கான கரங்கள் நாங்களே என்று, எங்கோ வேறு மாவட்டத்தில் இருப்பவருக்கும், இங்கு பிறந்து வெளியே பிழைக்க சென்று வாழ்ந்து வருபவர்களுக்காகவும் காத்திருந்த காலம் முடிந்தது. நாங்கள் எல்லா விதத்திலும் உயர்ந்துள்ளோம். இங்கே எங்களுள் பலர் அதிகார மையத்திற்கு உயர்ந்து விட்டனர். எங்களுடன் வாழும் அவர்களில் ஒருவரை நாங்கள் தேர்ந்தெடுத்து கொள்கிறோம் என்ற மனநிலைக்கு  ஒட்டப்பிடாரம் தொகுதி தேவேந்திர குலவேளாளர் சமூக மக்கள் வந்துவிட்டனராம்.


அதனால், இவர்களே இம்மக்களுக்காக தேவைப்படும் முகம் என்ற காலம் கடந்த கணிப்புகளால், டாக்டர் கிருஷ்ணசாமி, மாரி செல்வராஜ் போன்றோரின் வேட்பாளர் தேர்வும், இறக்குமதியும், தேர்தல் முடிவு நேரத்தில் அவர்களை நம்பி களம் இறங்கியவர்களை நகம் கடிக்கவே வைக்குமே தவிர, வெல்வோம் என்ற நிலை ஒரு போதும் ஏற்படாது என்று கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

  • Share on

விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையம் திறந்த கையோடு தூத்துக்குடிக்கு வந்து சோ்ந்த மற்றுமொரு நல்ல செய்தி

தூத்துக்குடியில் ஜூலை 31ல் மதிமுக நிர்வாகிகள் கூட்டம்!

  • Share on