பாஜக நிர்வாகியை வீடுபுகுந்து தாக்கிய திமுக பிரமுகரை கைது செய்ய வேண்டும் என்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் சித்ராங்கதன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில்,
"தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகா, நடுவக்குறிச்சி கிராமத்தில் தெற்கு மாவட்ட திமுக அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாவட்டத் துணைத் தலைவராக இருக்கும் பாலமுருகன், தனது அடியாட்களுடன் சென்று ஏரல் ஒன்றிய பாஜக நிர்வாகி ராஜதுரை வீடுபுகுந்து, அவரையும் அவரது மனைவி மற்றும் மனைவியின் இரு சகோதரர்களையும் அரிவாளால் வெட்டியும் உருட்டு கட்டைகளால் அடித்தும் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளார்.
திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்தச் சம்பவத்தில், தாக்குதலுக்கு உள்ளான ராஜதுரை சாயர்புரம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்ற போது, புகாரை பெற்றுக் கொள்ளாமல் எதற்காக இங்கு வந்தீர்கள்? காவல் நிலையத்தை விட்டு முதலில் வெளியே செல்லுங்கள் என்று கூறியுள்ளனர். பின்னர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வாயிலாக தூத்துக்குடி அரசு மருத்துவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட பாலமுருகன் மற்றும் அவரது கூட்டாளிகளை சம்பவம் நடைபெற்று இருதினங்கள் ஆகியும் இதுவரையில் காவல்துறை கைது செய்யாதது அதிர்ச்சியளிக்கிறது. மேலும் அவர்கள் மீது காவல்துறை சாதாரண பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. மேலும், உடனடியாக பாலமுருகன் மற்றும் அவனது கூட்டாளிகளை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
முன்னதாக தாக்குதலில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக நிர்வாகியை தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் சித்ராங்கதன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது பாஜக நிரவாகிகள் பலர் உடன் இருந்தனர்.




