தூத்துக்குடியில் கர்ம வீரர் காமராஜர் 123வது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தினர் கர்ம வீரர் காமராஜர் முதல்வராக இருந்தபோது வருகை தந்த பள்ளி உள்ளிட்ட 4 பள்ளிகளில் பயிலும் மாணவர் மாணவிகளுக்கு காலை மற்றும் மதிய உணவு வழங்கி காமராஜரின் பிறந்தநாளை கொண்டாடினர்.
மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கர்ம வீரர் காமராஜரின் 123 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தினர் மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் ஊர்வலமாக வந்து வ.உ.சி மார்கெட் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தனர்.

பின்னர் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சுமார் 25 இடங்களில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜர் திருஉருவப்படம் மற்றும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையிலான தவெகவினர், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இதில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள சுமார் 4 அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை மற்றும் மதிய உணவு வழங்கியதோடு நோட், புக் உள்ளிட்ட கல்வி உபகரண பொருட்களையும் வழங்கினர்.

இதில், காமராஜர் முதல்வராக இருந்தபோது 1956 ஆம் ஆண்டு தூத்துக்குடிக்கு வருகை தந்த போது தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் உள்ள அரசு உதவிபெறும் நடுநிலை பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அந்த பள்ளியில் இருந்த வருகை பதிவேட்டில் அவர் கையெழுத்து போட்டிருந்தார். இந்நிலையில் அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு அந்த பள்ளிக்கு சென்ற தமிழக வெற்றிக் கழகத்தினர் காமராஜர் கையெழுதிட்ட வருகை பதிவேட்டை பார்வையிட்டு அதே வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு பின்னர் அங்கு பயிலும் மாணவர், மாணவிகளுக்கு உணவு வழங்கிய தமிழக வெற்றிக் கழகத்தினர் மாணவர்களுடன் அமர்ந்து உணவு உண்டு மகிழ்ந்து கர்ம வீரர் காமராஜர் பிறந்த தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.



